×

திருமங்கலம் ஒன்றியத்தில் ரூ.4 லட்சத்தில் கட்டப்பட்டு வீணாகும் குளியல் தொட்டி: மின்சப்ளை இன்றி திறக்கப்படவில்லை

திருமங்கலம், நவ. 28: திருமங்கலம் ஒன்றியம் புலியூர் கிராமத்தில், ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குளியல் தொட்டிக்கு மின்சப்ளை கொடுக்காததால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலவில்லை என, திமுக ஒன்றிய கவுன்சிலர் தெரிவித்தார். திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய கூட்டம், ஒன்றிய தலைவர் லதா ஜெகன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் வளர்மதி அன்பழகன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கீதா மற்றும் சந்திரகலா, பொறியாளர் மாயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களின் பதவி காலம், அடுத்த மாதத்துடன் நிறைவடைவதால் நேற்று நடைபெற்ற கடைசி கூட்டத்தில் அனைத்து கட்சி கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

சுயேட்சை கவுன்சிலர் சிவபாண்டி பேசுகையில்,
‘‘செக்கானூரணி அரசு ஆரம்பசுகாதார நிலையம் மதுரை – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. ஆனால் இங்கு அவசர சிகிச்சை பிரிவு இல்லை. பெரிய விபத்துகள் நடந்தால் அவற்றில் சிக்கியவர்களை மதுரை கொண்டு செல்வதற்குள் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே செக்கானூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசரகால சிகிச்சை மையம் துவக்கவேண்டும்’’ என்றார்.

திமுக கவுன்சிலர் பரமன் பேசுகையில், ‘‘சாத்தங்குடி அருகே புலியூர் கிராமத்தில் ரூ.4 லட்சத்தில் புதிய குளியல் தொட்டி கட்டப்பட்டு ஆறு மாதங்கள் ஆகிறது. ஆனால் இங்கு மின்இணைப்பு தராமல் இருப்பதால் தண்ணீர் ஏற்ற முடியாமல் அதனை பொதுமக்கின் பயன்பாட்டிற்கு கொண்டுவர இயலவில்லை’’ என்றார்.

பாஜ கவுன்சிலர் ஓம்ஸ்ரீ முருகன் கோரிக்கைகளுக்கு, சுகாதார ஆய்வாளர் பழனி பதில் அளிக்கையில்,
‘‘பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு சுகாதாரத்துறையால் அபராதம் விதிக்க இயலாது. மக்கள் பிரநிதிகள் வந்தால் அபராதம் விதிக்கலாம். கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர்களிடம் கூறி மேல்நிலைத்தொட்டிகளை சுத்திகரித்து வருகிறோம். டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் ஏற்படாத வகையில் கொசு ஒழிப்பது பணிகளை கிராம பஞ்சாயத்துகள் மேற்கொள்ளலாம்’’ என்றார். இந்த கூட்டம் நிறைவடைந்த பின் அனைத்து கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

Tags : Thirumangalam union ,Thirumangalam ,DMK union ,Puliyur village ,union ,Thirumangalam panchayat ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...