×

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு “ஒன் ஸ்டாப் சென்டர்” மூலம் ஒருங்கிணைந்த ஆதரவு: கல்லூரி நிகழ்ச்சியில் கலெக்டர் தகவல்

கரூர். நவ. 26: வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு “ஒன் ஸ்டாப் சென்டர்” மூலம் ஒருங்கிணைந்த ஆதரவு வழங்கப்படுவதாக பாலின சமத்துவத்து நிகழ்ச்சியில் கலெக்டர் தகவல். கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி கலையரங்கத்தில் நோற்று மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் பாலின சமத்துவத்திற்கான பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு அளவிலான முயற்சிகள், திட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களை பல ஆண்டுகளாக முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு, கல்வி, ஆரோக்கியம் மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை உறுதி செய்வதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு பெண் கல்வி கற்பதன் மூலம் ஒரு சமுதாயமே முன்னேற்றம் அடைகிறது. பாலின சமத்தவத்தின் மூலம் சமுதாய மற்றும் பொருளாதார வளர்ச்சி அடைகிறது.

பெண்களுக்கு சமமான வாய்ப்புகள் அளிக்கும் போது அவர்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அவர்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறார்கள். உலக அளவில் பாலின சமத்தவத்தை அடைவதில் இன்னும் பல சவால்கள் உள்ளன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் சமத்துவத்தை உருவாக்க வேண்டும். ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலையை ஏற்படுத்தி பெண்களுக்கு கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பாலின சமத்துவத்தை அடைய ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளில் பாலின சமத்துவம் 5வது இலக்காக உள்ளது. பொது மற்றும் தனியார் இடங்களில் “ஒன் ஸ்டாப் சென்டர்” மூலம் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவம், சட்ட உதவி, உளவியல் ஆலோசனை மற்றும் தற்காலிக தங்குமிடம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த ஆதரவு வழங்கப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல் பற்றி புகார் அளிக்க 181 என்ற உதவி எண் மூலமும் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் துன்புறுத்தல்களுக்கு 1098 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம். அதே போல் பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களுக்கு பணி இடங்களில் உள்ள உள்ளக புகார் குழு மூலமும் புகார் அளிக்கலாமென மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் தனசேகரன், அரசு கலைக் கல்லூரி முதல்வர் (பொ) . சுதா, மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Karur ,Equality ,One Stop Center ,Danthonimalai Government Art College Art Gallery ,Pandu District ,Collector ,Dangavel ,
× RELATED கடவூரில் பருவமழைவேண்டி பிரதோஷ வழிபாடு