தென்காசி: தென்காசியில் நேற்று நடந்த அரசு விழாவில், “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் ஒரு லட்சமாவது பயனாளியாக செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், இலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுமதி என்பவருக்கு புதிய வீட்டிற்கான சாவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கலைஞரின் கனவு இல்லம் திட்டம் நாட்டிலேயே முதன்முறையாக ஊரகப் பகுதிகளில் ஏழைக் குடும்பங்கள் வசிக்கும் குடிசைகளுக்கு மாற்றாக நிரந்தர வீடுகள் கட்டித்தரும் முன்னோடித் திட்டமாகும். கலைஞரால் 1975ம் ஆண்டில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த 2010ம் ஆண்டு குடிசையில்லா மாநிலம் என்ற இலக்கை எய்திடும் வகையில் ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் 8 லட்சம் குடிசை வீடுகள் உள்ளதாக கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடையும் வகையில், வருகிற 2030ம் ஆண்டிற்குள் ஊரகப் பகுதிகளில் 6 ஆண்டுகளில் 8 லட்சம் வீடுகள் புதிதாக கட்டித்தருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
நிலையான கான்கிரீட் மேற்கூரையுடன் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவுடன் வாழும் ஊரக ஏழைக் குடும்பங்களின் கனவை நிறைவேற்றும் வகையில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 2024-25ம் ஆண்டிலேயே ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டது.
பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டத்தின் மூலம் 2024-25ம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட ஒரு லட்சம் வீடுகளும் ரூ.3 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தென்காசியில் நடந்த அரசு விழாவில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் ஒரு லட்சமாவது பயனாளியான செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், இலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுமதி என்பவருக்கு அவரது வீட்டிற்கான சாவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
* மாவட்டம் வாரியாக எத்தனை வீடுகள்?
அரியலூர் – 3,491, செங்கல்பட்டு – 3,990, கோவை – 1,428, கடலூர் – 3,500, தருமபுரி – 3,985, திண்டுக்கல் – 6,125, ஈரோடு – 3,940, கள்ளக்குறிச்சி – 2,965, காஞ்சிபுரம் – 2855, கன்னியாகுமரி – 1,790, கரூர் – 742, கிருஷ்ணகிரி – 3,443, மதுரை – 3,468, மயிலாடுதுறை – 2,498, நாகப்பட்டினம் – 2,500. நாமக்கல் – 5, 800, பெரம்பலூர் 1,200, புதுக்கோட்டை – 3,250, ராமநாதபுரம் -2,400, ராணிப்பேட்டை – 3,000, சேலம் – 3,500, சிவகங்கை – 741, தென்காசி – 424, தஞ்சாவூர் – 3,000. நீலகிரி – 1,297, தேனி – 961, தூத்துக்குடி -1,673 திருச்சி – 4,000. நெல்லை – 717, திருப்பத்தூர் – 3,000. திருப்பூர் -1,411, திருவள்ளுர் – 4,000. திருவண்ணாமலை – 3,114. திருவாரூர் – 2,570, வேலூர் – 2,711, விழுப்புரம் – 3500, விருதுநகர் -1,011. மொத்தம் – ஒரு லட்சம்.
* மேலும் ஒரு லட்சம் வீடு
‘2025-26ம் ஆண்டில், மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு, இதுவரை 16,245 வீடுகள் உடனடியாக முடிவுறும் நிலையிலும், 83 ஆயிரத்து 755 வீடுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திலும் இருந்து வருகின்றன. இவை அனைத்தும் 2025-26ம் நிதியாண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும்’ முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
