சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
* எடப்பாடி பழனிசாமி (அதிமுக): மலர்கின்ற இப்புத்தாண்டில் தமிழக மக்களுக்கு நிறைவான சந்தோஷத்தையும், தித்திக்கும் நிகழ்வுகளையும், நிறைந்த செல்வத்தையும், நீடித்த ஆயுளையும், நிம்மதியான வாழ்க்கையையும் வழங்கும் ஆண்டாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து, தமிழக மக்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது தூய வழியில் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
* ஓ.பன்னீர்செல்வம் (முன்னாள் முதல்வர்): மாற்றம் ஒன்றே மாறாதது. இதற்கேற்ப மாற்றங்கள் மலரும் ஆண்டாக, புதுமைகள் பூத்துக் குலுங்குகின்ற ஆண்டாக, தமிழக மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக, சாதி மத பேதமற்ற ஆண்டாக, பெண்ணையும் ஆணையும் சமமாக போற்றுகின்ற சரித்திர ஆண்டாக, தடைக் கற்களை தகர்த்தெறியும் வெற்றி ஆண்டாக புத்தாண்டு மலர வேண்டும்.
* செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): 2026 ஆங்கில புத்தாண்டில் இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கவும், மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்கிற வகையிலும், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எடுத்து வருகின்ற முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதன்மூலம் மக்களின் வாழ்வு ஏற்றம் பெற்று, ஒளிமயமான எதிர்காலம் அமைய அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
* கமல்ஹாசன் எம்.பி. (மநீம தலைவர்): கற்றுக்கொள்ளவும், பெற்றுக்கொள்ளவும், கொண்டாடவும், கொடுத்து மகிழவும் எண்ணற்ற ஆச்சர்யங்களைத் தன்னுள் ஒளித்துவைத்தபடி உதிக்கிறது புதியதோர் ஆண்டு. மூத்தோன் எனும் வகையில் மூன்று அம்சத் திட்டத்தை முன்மொழிகிறேன். ஸ்கீரின் டைம் துவங்கி துரித உணவு வரை குறைக்க வேண்டியதைக் குறைப்போம். ஆரோக்கியம் முதல் சீரான தூக்கம் வரை இழந்தவற்றை மீட்போம். வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் மகிழ்ந்து களிகூர்ந்து நிறைவாக வாழ்வோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
* மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): வரும் புத்தாண்டு 2026 உலக மக்கள் அனைவரும் மகிழ்வோடு வாழும் ஆண்டாக அமைந்திட வேண்டும். ரஷ்ய – உக்ரைன் போர், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் போன்றவை முடிவுக்கு வருவதுடன், அனைத்து நாடுகளிடையேயும், நட்புறவும், ஒத்துழைப்பும் வலுப்பெறும் ஆண்டாக அமைந்திட வேண்டும்.
* பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. . எதிர்வரும் ஆண்டில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. புதிய பாதைகளை புதிய ஆண்டு திறந்து விடும் என்ற நம்பிக்கையோடு மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
* வைகோ (மதிமுக): மலர்கின்ற 2026ம் ஆண்டு தமிழ்நாட்டு அரசியலிலும், இந்திய துணைக் கண்ட அரசியலிலும் வியப்பூட்டும் மகிழ்ச்சியான மாற்றங்களை வழங்கப் போகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றிபெற வாக்காள பெருமக்கள் இந்த நாளில் உறுதி ஏற்க வேண்டுகின்றேன்.
* திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): இவ்வாண்டில் இந்திய மக்களின் வாழ்வு உயரவும், வளம் பெருகவும்,, உலக அரங்கில் இந்தியா மிளிரவும் அனைவரும் பாடுபட இந்நாளில் சபதமேற்போம். குறிப்பாக தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், வளமும் நலமும் பெருகி மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.
* அன்புமணி (பாமக): புத்தாண்டு பிறப்பு என்பது ஆண்டுக்கு ஒரு முறை வழக்கமாக வந்து போகும் நிகழ்வல்ல. ஒவ்வொரு ஆண்டும் மனிதகுலத்தின் மனதில் புத்துணர்வையும், புது நம்பிக்கையையும் விதைப்பதற்கான புத்தாண்டில் தமிழக மக்களுக்கு அனைத்து நலன்கள், வளங்கள், மகிழ்ச்சி, வளர்ச்சி, அமைதி, மனநிறைவு, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று கூறி, மீண்டும் ஒருமுறை ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
* பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்): 2026ம் ஆண்டு அனைவருக்கும் இன்பம் பொங்கும் ஆண்டாக அமைந்திட வேண்டும் என தேமுதிக சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கேப்டனின் கனவு லட்சியத்தை வென்றெடுக்கும் மாநாடாக அமையும்.
* ஜி.கே.வாசன் (தமாகா): இந்த புத்தாண்டு உங்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும், வளங்கள் பெருகட்டும், எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையட்டும், மனநிறைவு அடையட்டும். நாட்டில் சமத்துவமும், சமாதானமும் ஏற்படட்டும், வளமான தமிழகம் அமையட்டும்.
* விஜய் வசந்த் எம்பி (காங்கிரஸ்): கடந்த ஆண்டின் அனுபவங்களையும் பாடங்களையும் சுமந்து கொண்டு, புதிய நம்பிக்கைகள், புதிய இலக்குகள், புதிய கனவுகளுடன் நாம் இந்த புத்தாண்டை வரவேற்கிறோம். இந்த புத்தாண்டு உங்கள் குடும்பங்களில் அமைதி, ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வளம் கொண்டு வரட்டும். ஜனநாயகத்தின் வலிமையை காக்கவும், நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
* எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கழகம்): 2026ம் ஆண்டு பிறக்கும் புத்தாண்டு புதிய சிந்தனை, புதிய முயற்சி, புதுவாழ்வு, நம்பிக்கை மலரட்டும். தமிழகத்தில் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மேம்படவும், வேலைவாய்ப்பு பெருகவும். இப்புத்தாண்டு வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இந்திய திருநாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தரும், இயேசு அழைக்கிறார் தலைவரும், சீஷா சமூகத் தொண்டு நிறுவனருமான பால்தினகரன்: ‘‘2026ம் ஆண்டு, கடந்த வருடங்களில் இழப்பை அனுபவித்த அனைவருக்கும் பலுகி பெருகும் வெற்றியின் ஆண்டாக இருக்கும். குடும்பங்களில் ஒற்றுமையும், பிள்ளைகளின் வாழ்வில் நிறைவேற வேண்டிய காரியங்கள் அனைத்தும் கைக்கூடி வரும்.
இயற்கை அனுகூலமாக, நல்ல விளைச்சலும், வருமானமும் பெருகும் வருடமாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் மற்றும் வீடு கட்டப்படும் வருடமாக இருக்கும். இவைகள் யாவும் நிறைவேற இறைவனிடம் பிரார்த்தனை செய்து இவ்வருடம் யாவருக்கும் கனத்துக்குரிய வருடமாக இருக்க வாழ்த்துகிறேன். இதுபோல், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்குமார்,
இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், புரட்சிபாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி, தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் நாசே.ராமச்சந்திரன், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாளர்) மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்க தலைவர் சேம.நாராயணன், இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் ஆ.ஹென்றி,
இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்க தலைவர் கண்ணன், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி, இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன், தேசிய நாடார் சங்க பொது செயலாளர் விஜயகுமார், வி.ஜி.சந்தோசம் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
* ‘தமிழ்நாட்டின் அடையாளம், சுயமரியாதையை நிலைநாட்டும் ஆண்டாக மலரட்டும்’
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள். பிறக்கின்ற 2026ஐ நாம் அனைவரும் நம்பிக்கையுடன், உற்சாகத்துடனும் வரவேற்று மகிழ்வோம். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் புதியதிட்டங்களும், மாநில உரிமைக்கான குரலும் புதுவேகத்துடன் பெருகும். இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகளுடன் போட்டியிடும் வளர்ச்சியை தமிழ்நாடு எட்டும்.
ஏழாவது முறையாக ஆட்சி அமைந்திட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்ற உரிமைக்குரல் 2026ல் மீண்டும் ஓங்கி ஒலித்திட நாம் அனைவரும் உறுதியேற்போம். தமிழ்நாட்டின் அடையாளத்தையும் சுயமரியாதையையும் நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும். புத்தாண்டில் அனைவரின் வாழ்வும் சிறக்கட்டும், செழிக்கட்டும்.
