×

அரங்கமா நகருளானே…

ஸ்ரீரங்கம்

பிரம்மனால் பூஜிக்கப்பட்டவரும், தன் குலதெய்வமுமான இந்த அரங்கனை, ஸ்ரீராமன் விபீஷணனுக்கு அன்போடு அளித்தார். இலங்கைக்கு அவன் எடுத்துச் செல்லும் வழியில், திருச்சியிலேயே பிரதிஷ்டையாகிவிட்டார் அரங்கன்.

கருவறைக்கு முன் உள்ளது ரங்க மண்டபம். இதை காயத்ரி மண்டபம் என்பர். காயத்ரி மந்திரத்திற்கு 24 எழுத்துக்கள் போல இதில் 24 தூண்கள் உள்ளன.

ஸ்ரீராமர் சந்நதிக்கு பக்கத்தில் சந்திர புஷ்கரணி உள்ளது. படிவழியாக சென்று அந்தப் பக்கத்தில் உள்ள அபூர்வ ‘யுகள ராதா சந்நதி’யில் கிருஷ்ணனையும், ராதையையும் தரிசிக்கலாம்.

பொதுவாக கோயில் விமான கலசங்களை ஒற்றைப்படையில்தான் அமைப்பர். ஆனால் இங்குள்ள ப்ரணவாகார விமானத்தில் நான்கு கலசங்கள் உள்ளன. இவை நான்கு வேதங்களையும் உணர்த்துவதாக அமைந்துள்ளன.

திருவரங்கத்தில் அரையர் சேவை விசேஷமானது. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை ராக தாளத்தோடு இசைப்பதோடு, நளினமாக நடனமும் ஆடுவது, கண்களுக்கும்
அருவிருந்தாகும்.

ஸ்ரீரங்கத்தில் பெரிய பிராட்டியான ரங்கநாயகியைச் சேர்த்து மொத்தம் 12 தாயார்கள் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.

ராமானுஜரின் ‘தானான திருமேனி’ எனப்படும் அவரின் திருவுடல் பெருமாளின் ஆணைப்படி இத்தலத்திலேயே நிறுவப்பட்டுள்ளது. வருடத்திற்கு இருமுறை இம்மேனிக்கு பச்சைக் கற்பூரம் சாற்றுகின்றனர்.

ரங்கநாயகி தாயார் சந்நதியருகே ஒரு வில்வ மரம் உள்ளது. அதன் கீழே ஆமை வடிவில் ஒரு கல். இந்தக் கல்லின் கீழ்தான் எதிரி படையெடுப்பிலிருந்து பாதுகாக்க எல்லா மூல விக்ரகங்களையும் புதைத்து வைத்தனர்.

ஏழு பிராகாரங்களும், அவற்றின் திருமதில்களும் சத்திய லோகம், தபோலோகம், ஜனலோகம், மஹர் லோகம், சுவர் லோகம், புவர் லோகம், பூலோகம் என்று ஏழு உலகங்களை உணர்த்துவதாக அமைந்துள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளையும், உறையூர் கமலவல்லி நாச்சியாரையும் அழகான மாப்பிள்ளை கோலத்தில் ஏற்றுக் கொண்டு அழகிய மணவாளன் ஆனார்.

பன்னிரு ஆழ்வார்களில் பதினோரு ஆழ்வார்களால் 247 பாக்களால் மங்களாசாஸனம் பொழியப்பட்ட திவ்யதேசம் இது.

திருமங்கையாழ்வார் திருநறையூர் பெருமாள் மீது திருமடல் பாடினார். ஸ்ரீரங்கத்தில் திருமதில் எழுப்பினார். அரங்கன் ‘எமக்கு மடல் இல்லையோ?’ என்றபோது, ‘மதில் இங்கே, மடல்
அங்கே’ என்றாராம் ஆழ்வார்.

‘அஞ்சு குழி மூணு வாசல்’ என்ற இடத்திலிருந்து பார்த்தால், கிழக்கு, வடக்கு, தெற்கு ஆகிய மூன்று வாசல்களும் தெரியும். இப்படித்தான் தாயார் பார்த்தாராம்.

ராமானுஜரின் காலம் கி.பி. 1020-1137 ஆகும். ஸ்ரீரங்கத்தின் வழிபாட்டு முறைகளை நெறிப்படுத்தியவர் இவர். அதுவே இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. இவரின் அரிய சேவைகளை கோயிலொழுகு எனும் ஸ்ரீரங்கம் வழிபாடு முறை விளக்கும் நூல் சிறப்பித்துக் கூறுகிறது.

சந்திர புஷ்கரணி, வில்வ தீர்த்தம், நாவல் தீர்த்தம், அரசு தீர்த்தம், புன்னை தீர்த்தம், மகிழ் தீர்த்தம், பொரசு தீர்த்தம், கடம்ப தீர்த்தம், மா தீர்த்தம் என்று ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன.

ஸ்ரீரங்கம் த்வஜஸ்தம்பத்திற்கு பக்கத்தில் சிறிய மண்டபத்தில் ஹயக்ரீவர், சரஸ்வதிக்கு உபதேசிக்கும் கோலத்திலுள்ள அபூர்வ சிலையைக் காணலாம்.

வைணவப் பேரறிஞர்களான பட்டர், வடக்கு வீதிப் பிள்ளை, பிள்ளை லோகாச்சார்யார், பெரிய நம்பி போன்றோரின் அவதாரத் தலமிது.

இங்கு எல்லாமே பெரியவை. பெரிய கோயில், பெரிய பெருமாள், பெரிய பிராட்டி… கருடனுக்கு பெரிய திருவடி என்று பெயர். நிவேதனப் பொருட்களை பெரிய அவசரம் என்பர்.

எல்லா திவ்யதேச பெருமாள்களும் இரவில் இங்கு வந்து விடுவதாக ஐதீகம். ரங்கனின் அதிகாலை விஸ்வரூபத்தை தரிசித்தால் 108 திவ்ய தேசப் பெருமாள்களையும் தரிசித்ததற்கு ஒப்பாகும்.

உலகம் போற்றும் கம்பராமாயணத்தை கம்பர் இங்குதான் அரங்கேற்றம் செய்தார்.

தொகுப்பு: கிருஷ்ணப்ரியா

Tags : Srirangam ,Sriraman Vibeishnan ,Sri Lanka ,Gayathri Manapam ,
× RELATED மலர்களிலே பல நிறம் கண்டேன்