×

ஆசிய கோப்பை டி20 இந்தியா அபார வெற்றி

அபுதாபி: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் துபாய், அபுதாபி நகரங்களில் நடந்து வருகின்றன. இந்த தொடரில், குரூப் ஏ-யில் ஆடி வரும் இந்தியா ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. இந்நிலையில், கடைசி லீக் போட்டியில் ஓமன் அணியுடன் இந்தியா நேற்று மோதியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி 2 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 38 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

சுப்மன் கில், 5 ரன்னில் வீழ்ந்தார். பின் வந்த ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னில் ரன் அவுட்டானார். பின் வந்தோரில், சஞ்சு சாம்சனும், அக்சர் படேலும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். அக்சர் படேல் 13 பந்தில் 26 ரன் விளாசிய பின் விக்கெட்டை பறிகொடுத்தார். பின் சஞ்சுவுடன், சிவம் தூபே இணை சேர்ந்தார். ஆனால் சிறிது நேரத்தில் தூபே 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா, சஞ்சுவுடன் சேர்ந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து ரன்களை குவித்தார். 41 பந்துகளில் அரை சதம் கடந்த சஞ்சு சாம்சன் (56 ரன்), ஃபைசல் பந்தில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர் முடிவில், இந்தியா, 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன் குவித்தது. ஹர்சித் ராணா 13 ரன்னுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஓமன் தரப்பில் ஆமிர் கலீம், ஷா ஃபைசல், ஜிதேன் ரமணாண்டி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 189 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி களமிறங்கியது. ஆட்ட நேர முடிவில் ஓமன் அணி 4 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இந்திய அணி 21 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

Tags : Asia Cup T20 ,India ,Abu Dhabi ,Dubai ,United Arab Emirates ,
× RELATED ஆப்கோன் கால்பந்து; சூடானை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி