துணை ஜனாதிபதி தேர்தல் இந்தியா கூட்டணிக்கு வெளியில் இருந்தும் ஆதரவு கிடைக்கும்: சுதர்சன் ரெட்டி தகவல்

லக்னோ: துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ம் தேதி திடீரென்று தன் பதவியை ராஜினாமா செய்ததால், புதிய துணைஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கடசி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்தவரும், மகாராஷ்டிரா மாநிலத்தின் தற்போதைய ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

இதேபோல் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தெலங்கானாவை சேர்ந்தவருமான பி.சுதர்சன் ரெட்டி களம் காண்கிறார். இந்நிலையில் சுதர்சன் ரெட்டி நேற்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு சென்று காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

நேற்று காலை லக்னோ சென்றடைந்த அவரை உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், மாநில பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே, மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரி மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் வரவேற்றனர். அதன்பிறகு அவர் கூறியதாவது: எதிர்க்கட்சிகள் என்னை நம்பியுள்ளன. இந்தியா கூட்டணி மட்டுமல்ல, கூட்டணிக்கு வெளியே உள்ளவர்களும் உதவ முன்வருவதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால் எனது நண்பர் அகிலேஷ் யாதவ் இல்லாமல், இது சாத்தியமில்லை.

நான் நக்சல் ஆதரவாளர் என்ற அமித்ஷா குற்றச்சாட்டு குறித்த விவாதத்தை விரிவுபடுத்த விரும்பவில்லை . அவர்கள் ஒரு கதையை உருவாக்க முயற்சிக்கிறார்கள். நான் என்ன பதில் அளிக்க வேண்டுமோ, அதை நான் அளித்துள்ளேன். சொல்ல வேண்டிய அனைத்தையும் நான் சொல்லிவிட்டேன், விவாதத்தை விரிவுபடுத்தி எதையும் சொல்ல விரும்பவில்லை. இது துணை ஜனாதிபதி தேர்தல். அது ஒரு அரசியல் அலுவலகம் அல்ல என்பதால் நான் அரசியல் பிரச்னைகள் பற்றி பேச மாட்டேன். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: