வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை தளபதிக்கு எஸ்ஐஆர் நோட்டீஸ் ஏன்? தேர்தல் ஆணையம் விளக்கம்

பானாஜி: இந்தியா-பாகிஸ்தான் போரில் ஈடுபட்டு, வீர் சக்ரா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் அருண் பிரகாஷுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நோட்டீஸ் அனுப்பியது சர்ச்சையான நிலையில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. கோவாவில் எஸ்ஐஆர் கணக்கெடுப்பு பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இப்பட்டியலில் இடம் பெற்றவர்களில் போதிய விவரங்களை தராதவர்களுக்கு உரிய ஆவணங்களை வழங்கக் கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதன்படி, முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் அருண் பிரகாஷுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து அருண் பிரகாஷ் கருத்து கூறுகையில், என்னென்ன தகவல் வேண்டும் என்பதை முழுமையாக திரட்ட, எஸ்ஐஆர் படிவத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கு ஆயுதப்படைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 1971ம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் போரில் தனது பங்களிப்பிற்காக வீர் சக்ரா விருது பெற்றவர் அருண் பிரகாஷ். ஜம்மு காஷ்மீரில் பிறந்த இவர் பல்வேறு விருதுகளை பெற்றதோடு கடற்படையில் உயர் பதவிகளை வகித்தவர்.

இந்நிலையில், அருண் பிரகாஷுக்கு நோட்டீஸ் அனுப்பியது குறித்து கோவா மாநில தேர்தல் பதிவு அதிகாரி மெடோரா டிகோஸ்டா நேற்று அளித்த விளக்கத்தில், ‘‘எஸ்ஐஆர் கணக்கெடுப்பு படிவத்தில் முந்தைய எஸ்ஐஆர் தொடர்பான விவரங்களை அருண் பிரகாஷ் வழங்கவில்லை. இந்த தகவல்கள் காலியாக விடப்பட்டதால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி ஆவணங்கள் பெறுவது கட்டாயமாகிறது’’ என்றார்.

Related Stories: