*விவசாயிகள், பொதுமக்கள் அச்சம்
கூடலூர் : கூடலூர் சுற்று வட்டாரத்தில் வன எல்லையை ஒட்டிய பகுதிகள் மட்டுமின்றி உள் கிராமங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் காட்டு யானைகள் நடமாட்டம் தொடர் கதையாக உள்ளது. எல்லா பகுதிகளிலும் யானை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையில் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.
வனத்துறையினர் ஊருக்குள் வரும் காட்டு யானைகளை கண்காணித்து வனப்பகுதிகளுக்குள் விரட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறும் நிலையில், தற்போது மேலும் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஸ்ரீ மதுரை ஊராட்சி பகுதியில் விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானை வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளது.
இதேபோல் நேற்று காலை நேரத்தில் ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட சுண்ணாம்பு பாலம் மற்றும் பாரதி நகர் பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் ராதாகிருஷ்ணன் என அழைக்கப்படும் ஆட்கொல்லி யானை நடமாடியது. இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் யானையை அங்கிருந்து வேறு பகுதிக்கு விரட்டினர். தொடர்ந்து யானை அருகில் உள்ள தனியார் ஏலக்காய் தோட்டம் வழியாக சென்றது.
இதேபோல் கூடலூரை அடுத்த முதல்மைல் கொக்காகாடு குடியிருப்பு பகுதியில் காட்டு யானை ஒன்று நடமாடியது. தொடர்ச்சியாக ஊருக்குள் நடமாடும் காட்டு யானைகளை நிரந்தரமாக அடர் வனப்பகுதிக்குள் விரட்டி அவை மீண்டும் ஊருக்குள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
