பாகல்பூர்: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பீகார் மாநிலத்தில் வாக்குதிருட்டுக்கு எதிராக யாத்திரை நடத்தி வருகிறார். இந்த சூழலில் பிரதமர் மோடி நேற்று அங்கு விரைவில் வர உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது வாக்கு திருட்டு பிரச்னை பற்றி அங்கு பேசாதது ஏன் என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார். ராகுல்காந்தி நேற்று பாகல்பூர் பகுதியில் யாத்திரை மேற்கொண்டார் அப்போது அவர் கூறியதாவது: பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என்பது பிரதமர் மோடி, பாஜ மற்றும் தேர்தல் ஆணையம் உங்கள் வாக்குகளைத் திருட மேற்கொண்ட முயற்சி. அவர்கள் உங்கள் வாக்குரிமையைப் பறிக்க தங்களால் இயன்றவரை முயற்சி செய்கிறார்கள். வாக்கு திருடன் ( பிரதமர் மோடி) கயாஜி(பீகார் மாநிலம்) வந்தார்.
ஆனால் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்குகளைத் திருட தனது அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி குறித்து அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்த விவகாரத்தில் மோடி ஏன் மவுனம் காக்கிறார் என்பது தெரியவில்லை. வாக்கு திருட்டு என்பது இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல். பீகார் மக்களின் வாக்குரிமையை பாஜ திருட இந்தியா கூட்டணி அனுமதிக்காது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தால் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் ஏழைகளுக்கு எதிரானவை. மேலும் அது இளைஞர்களுக்கான அனைத்து வேலைவாய்ப்புகளையும் மூடிவிட்டது. இவ்வாறு குற்றம்சாட்டினார்.
