ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகள்: சென்னை பல்கலைக்கழகம் திட்டம்

 

சென்னை: தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைகளுக்கு ஏற்ப, சென்னை பல்கலைக்கழகம் நடப்புக் கல்வியாண்டு முதல் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்க அனுமதிக்க திட்டமிட்டுள்ளது. தொலைதூர கல்வி முறையில் படிப்பவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிப்பதற்கான திட்டங்களில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.

இரட்டை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை வகுக்கும் பணி தொலைதூர கல்வி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: வணிகம், கலை மற்றும் அறிவியல் படிப்புகளை படிக்கும் மாணவர்கள் கூடுதல் பாடத்தை படிப்பதன் மூலம் தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும். பிளஸ்-2 தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றதால் நகரங்களில் உள்ள கல்லூரிகளில் பி.காம். சேர்க்கை மிகவும் கடினமாக உள்ளது.

பி.ஏ. பொருளாதாரம் படிக்கும் ஒரு மாணவர் தொலைதூர கல்வி முறையில் பி.காம் படிப்பில் சேர்ந்து ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்கலாம். இது அவர்களுக்கு ஆர்வமுள்ள துறையில் வேலைவாய்ப்பை பெற உதவும். இது கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பயனளிக்கும். தொலைதூர கல்வி முறையில் பி.சி.ஏ. மற்றும் பி.பி.எம். பட்டம் பெறுவது கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கு மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: