சென்னை: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னையில் நேற்று அடையாள போராட்டம் நடந்தது. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு பொது மருத்துவமனைகளில் 13 ஆண்டுகளுக்கு மேலாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை வலியுறுத்தி, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் பணி நிரந்தரம் வேண்டி நேற்று ஒரு நாள் அடையாள போராட்டம் நடத்தினர்.
பன்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் மாநில தலைவர் எம்.சங்கர் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்களின் மாநில தலைவர் எஸ்.மதுரம் மற்றும் அகில இந்திய தலைவர் கே.கணேசன் முன்னிலை வகித்தனர்.பன்நோக்கு மருத்துவமனை மற்ற சங்க நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், வட்டக்கிளை நிர்வாகிகள் ஆதரவுடன் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
