×

ஆசிய கோப்பை டி20: இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ்? இன்று அறிவிப்பு வெளியாகும்

மும்பை: அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை டி20 போட்டிக்கான இந்திய அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர்வார் என கூறப்படுகிறது. அதேசமயம் டெஸ்ட் போட்டி கேப்டன் சுப்மன் கில்லுக்கு, இந்திய அணியில் இடம் இருக்காது என தகவல்கள் கூறுகின்றன. ஆசிய கோப்பை டி20 போட்டிகள் வரும் செப்டம்பர் 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம், மும்பையில் இன்று நடைபெற உள்ளது.

இதில் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட குழு பங்கேற்கும் என தெரிகிறது. ஐபிஎல் போட்டிகளின்போது காயமடைந்த சூர்யகுமார் யாதவ், முழு உடல் தகுதி பெற்றிருப்பதாக மருத்துவ பரிசோதனை முடிவு வெளியாகி உள்ளது. எனவே, அவர் தலைமையில் ஆசிய கோப்பை போட்டிகளை இந்திய அணி எதிர்கொள்வது உறுதியாகி உள்ளது. வரும் 2026ல், இந்தியா, இலங்கையில் நடைபெற உள்ள உலகக் கோப்பை டி20 போட்டிகள் வரை, இந்திய டி20 அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவே தொடர்வார் என கூறப்படுகிறது.

சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில், இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் அற்புதமாக செயல்பட்டபோதும் அவருக்கு டி20 போட்டியில் ஆட வாய்ப்பு மறுக்கப்படும் என தெரிகிறது. ஆசிய கோப்பை போட்டிகளில் விக்கெட் கீப்பர், பேட்டர் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா இணை, துவக்க வீரர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. 3வது வீரராக திலக் வர்மாவும், 4வது இடத்தில் சூர்யகுமார் யாதவும் பேட் செய்வர் என கூறப்படுகிறது. சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசிய அதிரடி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என தேர்வுக்குழு கருதுவதாக தெரிகிறது. அதேபோல், ஷ்ரேயாஸ் ஐயருக்கும் வாய்ப்பு மறுக்கப்படும் என கூறப்படுகிறது.

* பும்ரா உள்ளே; சிராஜ் வெளியே
ஆசிய கோப்பை இந்திய அணியில், பந்து வீச்சாளராக நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு முக்கியத்துவம் தரப்பட உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட முகம்மது சிராஜ், டி20 போட்டிகளில் இடம்பெற மாட்டார் என தெரிகிறது. இந்திய அணியில், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பந்து வீச்சாளர்களாக இடம்பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும், சுழல் பந்து வீச்சாளர்களாக வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Tags : Asia Cup T20 ,Suryakumar Yadav ,India ,Mumbai ,Indian ,Shubman Gill ,
× RELATED கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அலிஷா ஹீலி ஓய்வு