பாஜவுடன் கூட்டு சேர்ந்து தேர்தல் ஆணையம் முறைகேடு நாடு முழுவதும் அரங்கேறிய வாக்கு திருட்டு: பீகாரில் யாத்திரையை தொடங்கி வைத்து ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சசாரம்: பீகாரில் வாக்காளர் அதிகார யாத்திரையை நேற்று தொடங்கி வைத்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘பாஜவுடன் கூட்டு சேர்ந்து தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் வாக்கு திருட்டை அரங்கேற்றியுள்ளது. வாக்கு திருட்டு எப்படி நடத்தப்படுகிறது என்பதை இப்போது முழுநாடும் அறிந்துள்ளது. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் இப்போது பீகார் தேர்தலை திருட முயற்சிப்பது அவர்களின் சமீபத்திய சதி. அதை நாங்கள் நடத்த விட மாட்டோம்’’ என்றார்.

பீகாரில் வரும் நவம்பரில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் பல லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு வாக்கு திருட்டு நடப்பதை கண்டித்தும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி பீகாரில் 20 மாவட்டங்களில் 1,300 கிமீ தொலைவுக்கு வாக்காளர் அதிகார யாத்திரையை மேற்கொண்டுள்ளார்.

மொத்தம் 16 நாட்கள் நடக்கும் இந்த யாத்திரையின் தொடக்க விழா பீகாரின் சசாரம் நகரில் பிஐஏடிஏ மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், விகாஷீல் இன்சான் கட்சியின் முகேஷ் சஹானி, சிபிஐ(எம்எல்) லிபரேஷன் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, மார்க்சிஸ்ட் கட்சியின் சுபாஷினி அலி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பி. சந்தோஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

யாத்திரையை ராகுல் காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது: நாடு முழுவதும் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் வாக்குகள் திருடப்படுகின்றன. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு திருட்டு மூலம் பாஜ வெற்றி பெறுகிறது. மகாராஷ்டிராவில் அனைத்து கருத்துக் கணிப்புகளும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று கூறின.  மக்களவையில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த 4 மாதத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒரு கோடி வாக்காளர்கள் திடீரென சேர்க்கப்பட்டதால் பாஜ கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இந்த போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட இடங்களில் வென்று பாஜ கூட்டணியை ஆட்சியை பிடித்தது. இந்தியா கூட்டணி கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து வீடியோ பதிவுகளை கேட்டன. ஆனால் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதே போல, கர்நாடகாவிலும் வாக்கு திருட்டு நடந்ததை ஆதாரத்துடன் வெளிப்படுத்தினேன். ஆனால் நான் மேற்கோள் காட்டிய தரவுகளுக்காக பிரமாண பத்திரத்தை தருமாறு தேர்தல் ஆணையம் என்னிடம் கேட்கிறது.

ஆனால் இதுவே பாஜ தலைவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த போது எந்த பிரமாண பத்திரத்தையும் தேர்தல் ஆணையம் கேட்டதில்லை. இப்போது, பீகாரில் தேர்தலை திருடுவதற்காக சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வாக்காளர்களை நீக்கி சேர்ப்பதே அவர்களின் சமீபத்திய சதி. பீகாரில் தேர்தலை திருட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பீகார் மக்கள் தேர்தல்களைத் திருட விடமாட்டார்கள். ஏழைகளிடம் உள்ள ஒரே பலம் வாக்குரிமை, அவர்கள் வாக்குகளை திருட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

பாஜவுடன் கூட்டு சேர்ந்து தேர்தல் ஆணையம் செய்யும் வாக்கு திருட்டை முழு நாடும் இப்போது அறிந்திருக்கிறது. தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது, எப்படி தேர்தல்களை திருடுகிறது என்பதை காங்கிரஸ் ஆதாரத்துடன் வெளிப்படுத்தி உள்ளது.  இந்த திருட்டு பீகார், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம் என எங்கு நடந்தாலும், அவர்களின் திருட்டை நாங்கள் கண்டுபிடித்து மக்கள் முன் வைப்போம்.

பிரதமர் மோடி கோடீஸ்வரர்களுடன் சேர்ந்து அரசை நடத்துகிறார். உங்கள் வாக்கு திருடப்பட்டு, பின்னர் உங்கள் பணம் 5-6 கோடீஸ்வரர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜ அரசியலமைப்பை அழிக்க முயற்சிக்கின்றன. இது அரசிலமைப்பை காப்பதற்கான போராட்டம். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். இந்த யாத்திரை வரும் செப்டம்பர் 1ம் தேதி பாட்னாவில் பிரமாண்ட பேரணியுடன் நிறைவடையும்.

* சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் நடத்தி முடிப்போம்
ராகுல் காந்தி மேலும் பேசுகையில், ‘‘சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வேண்டும் என்றும், இடஒதுக்கீட்டிற்கான 50 சதவீத உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் நாங்கள் கூறியிருந்தோம். அந்த அழுத்தத்தினால்தான் பாஜ அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை அறிவித்தது.

ஆனால் அவர்கள் உண்மையான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மாட்டார்கள். இடஒதுக்கீட்டிற்கான 50 சதவீத உச்சவரம்பை ஒருபோதும் நீக்க மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனாலும், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் நாங்கள் நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி இடஒதுக்கீட்டிற்கான 50 சதவீத உச்சவரம்பை நீக்குவோம்’’ என்றார்.

* பீகாரில் இந்தியா கூட்டணி வெல்லும்
யாத்திரையில் உடல் நலக்குறைவுடன் பங்கேற்ற 70 வயதான லாலு பிரசாத் யாதவ், ‘‘ஜனநாயகத்தை வலுப்படுத்த, தேசிய ஜனநாயக கூட்டணி அரசை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிய வேண்டும். பீகார் சட்டப்பேரவை தேர்தலில், தற்போதுள்ள திருடர்களின் அரசை இந்தியா கூட்டணி ஆட்சியிலிருந்து அகற்றும்.

நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக நிற்க வேண்டும், பாஜ-ஆர்எஸ்எஸ் கூட்டணியை விரட்ட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார். முன்னதாக, லாலு பாட்னாவில் இருந்து சசாரம் புறப்படும் முன்பாக அளித்த பேட்டியில், பாஜ அரசின் கீழ் நாட்டில் நிலவும் நிலைமை, அவசரநிலை காலத்தை விட மோசமாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.

* பாஜவின் ஏஜென்ட் தேர்தல் ஆணையம்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், ‘‘மகாராஷ்டிராவில் 1 கோடி போலி வாக்காளர்களை சேர்த்து வெற்றி பெற்றதை போல, பீகாரிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் சதி முயற்சிகள் நடக்கின்றன. தேர்தல் ஆணையம், ஒன்றிய பாஜ அரசின் ஏஜென்டாக மாறியிருப்பது போல் தெரிகிறது.

தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான குழுவில் தலைமை நீதிபதி சேர்க்கப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை புறக்கணித்து, தேர்வுக்குழுவில் ஒன்றிய அமைச்சரை மோடி அரசு நியமித்தது. இதன் நோக்கம் அனைவருக்கும் இப்போது புரிந்துள்ளது’’ என்றார்.

* வாக்குரிமையை பறிக்கிறது பாஜ
ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ‘‘அம்பேத்கர் நமக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கினார். ஆனால் பாஜ தேர்தல் ஆணையம் மூலம் இந்த உரிமையை பறிக்கிறது. தேர்தல் ஆணையம் பாஜவின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறது. பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் என்பது மக்களின் வாக்குரிமையை பறிக்கும் ஆளுங்கட்சியால் செய்யப்பட்ட சதி. பீகார் மக்களை மோடி ஏமாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’’ என்றார்.

Related Stories: