கலசபாக்கம், ஆக. 13: முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்ததைதொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று துணை சபாநாயகர் ரேஷன் பொருட்களை வழங்கினார். தமிழ்நாட்டில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னை தண்டையார்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
பயனாளிகளின் வீட்டிற்கு சென்று ரேஷன் பொருட்களை முதல்வர் வழங்கினார். இதன்படி நேற்று திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். டிஆர்ஓ ராம்பிரதீபன், எம்எல்ஏ பெ.சு.தி. சரவணன் முன்னிலை வகித்தனர். இணைப்பதிவாளர் பார்த்திபன் வரவேற்றார். நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்து அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை பயனாளிகளின் வீட்டிற்கு சென்று வழங்கினார்.
மேலும் வயது முதிர்ந்தோர் மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்குவதால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர் வினோத், மேலாண்மை இயக்குனர்கள் பிரேமா சுரேஷ்குமார், சிவக்குமார், தாசில்தார் தேன்மொழி, ஒன்றிய திமுக செயலாளர்கள் சிவக்குமார், சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் அன்பரசி ராஜசேகரன், ஒன்றிய துணை செயலாளர் குப்பன், நகர செயலாளர் சவுந்தர்ராஜன், மாவட்ட பிரதிநிதி சின்னதுரை முன்னாள் ஊராட்சி தலைவர் பச்சையப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில் பொது மேலாளர் அபிதா நன்றி கூறினார்.
