×

தெருநாய்களை அப்புறப்படுத்தும் உத்தரவு ஏற்கதக்கதல்ல: ராகுல் காந்தி எதிர்ப்பு

புதுடெல்லி: ெடல்லி தெருநாய்களைக் காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவானது, இரக்கமற்றதும் குறுகிய பார்வை கொண்டதுமாகும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார். தலைநகர் ெடல்லியில் சுற்றித்திரியும் அனைத்துத் தெருநாய்களையும் எட்டு வாரங்களுக்குள் பிடித்து, காப்பகங்களில் அடைத்துப் பராமரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஒரு நாய்கூட தெருக்களில் விடப்படக்கூடாது என்பதை உறுதி செய்யுமாறு ெடல்லி அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களுக்குக் கடுமையாக அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம், இந்த நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் தனிநபர்கள், விலங்கு ஆர்வலர்கள் அல்லது அமைப்புகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘டெல்லியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவானது, மனிதாபிமான மற்றும் அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொள்கைகளிலிருந்து பின்னோக்கிச் செல்லும் நடவடிக்கையாகும். இந்த வாயில்லா ஜீவன்கள் அழிக்கப்பட வேண்டிய சிக்கல் அல்ல; தெருநாய்களை ஒட்டுமொத்தமாக அகற்றுவது என்பது கொடூரமான, குறுகிய பார்வை கொண்ட, இரக்கமற்ற செயலாகும்.

அவற்றுக்கு உரிய தங்குமிடங்கள், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூகப் பராமரிப்பு போன்ற நடவடிக்கைகளின் மூலமே தெருக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். பொதுமக்களின் பாதுகாப்பையும் விலங்குகளின் நலனையும் ஒருசேரக் கொண்டுசெல்வதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்றும் ராகுல் காந்தி தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags : Rahul Gandhi ,New Delhi ,Lok Sabha ,Supreme Court ,Delhi ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது...