மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலைவாசஸ்தலமான வாகமனில் பசுமையான மலைக்குன்றுகள், தரை தவழும் மேகங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் ஏராளமாக உள்ளன. இவைகளை கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டம், இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் மாவட்டமாகும். இங்குள்ள மூணாறு, மறையூர், வட்டவடை, வாகமன் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக திகழ்ந்து வருகிறது. இதில், வாகமன் குமுளி அருகே உள்ள தேக்கடியில் இருந்து 45 கி.மீ. தொலையில் அமைந்துள்ள மலைவாசஸ்தலமாகும். கோட்டயம்-இடுக்கி மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1.100 மீ உயரத்தில் உள்ள இந்த மலைவாசஸ்தலம் தங்கல் மலை, முருகன் மலை, குறிசுமலை என 3 மலைகளால் சூழப்பட்டுள்ளது.
பசுமை பூசிய மலைக்குன்றுகள், தேயிலைத் தோட்டங்கள், பசுமைப் பள்ளத்தாக்குகள், அருவிகள், பைன் மரக்காடுகள், புல்வெளிகள், அட்வஞ்சர் பூங்கா ஆகியவை வாகமனின் அழகுக்கு அழகு சேர்க்கிறது. இங்கு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் கேரள அரசு பல கோடி ரூபாய் செலவில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வாகமன் சாகச பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலம் நாட்டிலேயே நீளமான பாலமாகும். இந்த பாலத்தில் இருந்து அழகிய பசுமைப் பள்ளத்தாக்கை ரசிக்கலாம். தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், மலைக்குன்றுகளை மழை மேகங்கள் தழுவிச் செல்லும் காட்சி ரம்மியமாக கவர்கிறது. மேலும் அட்வஞ்சர் பூங்காவில் பாரா கிளைடிங், ஸ்கை ஸ்விங், ஸ்கை சைக்கிளிங், ஸ்கை ரோலர், ராக்கெட் எஜெக்டர் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்து வருகிறது. பருவமழை சீசனை அனுபவிக்க சுற்றுலாப் பயனிகள் வந்த குவிந்த வண்ணம் உள்ளனர்.
