×

அரக்கோணம் அருகே நள்ளிரவு பரபரப்பு: புதையல் எடுக்க நரபலி கொடுக்க முயற்சி?: லாரி டிரைவரிடம் தீவிர விசாரணை

அரக்கோணம்: அரக்கோணம் அருகே லாரி டிரைவர் வீட்டில் பூஜை நடத்தி பள்ளம் தோண்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதையல் எடுக்க ஏதேனும் நரபலி கொடுத்து பள்ளம் தோண்டினார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த முசல்நாயுடு கண்டிகை பகுதியை சேர்ந்தவர்  ஆசீர்வாதம்(51), லாரி டிரைவர். இவருக்கு சொந்தமான பூர்வீக வீடு கிழவனம் பகுதியில் உள்ளது. அந்த வீடு நீண்டநாட்களாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு 9 மணியளவில் ஆசீர்வாதம், சாமியார் ஒருவருடன் சேர்ந்து வீட்டில் பூஜை செய்து கொண்டிருந்தார். இரவு நேரத்தில் திடீரென மணி சத்தம், மந்திரம் உச்சரிப்பது போன்றவை அக்கம் பக்கத்தினருக்கு கேட்டது. இதனால் அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் பள்ளம் தோண்டப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், அந்த வீட்டிற்குள், புதையல் ஏதேனும் எடுக்க பள்ளம் தோண்டினார்களா? அல்லது நரபலி போன்ற செயல்களில் ஈடுபட பள்ளம் தோண்டினாரா? என சந்தேகித்தனர். உடனடியாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது வீட்டின் ஒரு மூலையில் கலசங்கள் வைக்கப்பட்டு, வெற்றிலை, பூக்கள், மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்யப்பட்டதும், வீட்டின் நடுப்பகுதியில் சுமார் 2 அடி ஆழத்தில் வட்ட வடிவிலான பள்ளம் தோண்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது. ஆனால் அங்கிருந்த சாமியாரை காணவில்லை. இதையடுத்து வீட்டில் இருந்த லாரி டிரைவர் ஆசீர்வாதத்திடம் விசாரணை நடத்தினர்.  

விசாரணையில், அரக்கோணம் அருகே  ஆசீர்வாதத்தின் மருமகன் பாண்டியன் சமீபத்தில் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டதாகவும், இதனால் கணவரை இழந்து தனியாக வசிக்கும்  மகள் சுலோச்சனாவை அழைத்து வந்து இந்த வீட்டில் குடியிருக்க வைக்க திட்டமிட்டாராம். ஆனால் வீடு நீண்ட நாட்களாக பூட்டி வைத்ததால் தீயசக்திகள் ஏதேனும் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பூஜை நடத்தியதாக தெரிவித்தார். இருப்பினும் ஆசீர்வாதத்திடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Aragon , Hemisphere, euthanasia, trial
× RELATED அரக்கோணத்தில் சிமெண்ட் சீட்...