×

ருதுராஜ் அதிரடி அரை சதம்: லக்னோவை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை: லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் உனத்கட்டுக்கு பதிலாக யஷ் தாகூர் இடம் பெற்றார். சென்னை அணி மாற்றமின்றி களமிறங்கியது. ருதுராஜ், கான்வே இணைந்து சிஎஸ்கே இன்னிங்சை தொடங்கினர். முதல் பந்து வீசப்படும் முன்பாக மைதானத்துக்குள் புகுந்த ஒரு நாய் அங்குமிங்குமாக ஓடி ஸ்டேடிய ஊழியர்களை அலைக்கழிக்க, ஆட்டம் தொடங்குவதில் சிறு தாமதம் ஏற்பட்டது.

தொடக்கத்தில் இருந்தே லக்னோ பந்துவீச்சை பதம் பார்த்த ருதுராஜ் – கான்வே ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 9 ஓவரில் 110 ரன் சேர்த்து அசத்தியது. 25 பந்தில் அரை சதம் அடித்த ருதுராஜ் 57 ரன் (31 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கான்வே 47 ரன் (29 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி வுட் வேகத்தில் க்ருணால் வசம் பிடிபட்டார். துபே 27 ரன் (16 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), ஹாட்ரிக் பவுண்டரி அடித்து அமர்க்களப்படுத்திய மொயீன் 19 ரன், ஸ்டோக்ஸ் 8, ஜடேஜா 3 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ரசிகர்களின் ஆரவார வரவேற்புடன் களமிறங்கிய சிஎஸ்கே கேப்டன் தோனி, சந்தித்த முதல் 2 பந்துகளையும் இமாலய சிக்சர்களாக தூக்கி பரவசப்படுத்தினார்.

ஹாட்ரிக் சிக்சர் அடிக்கும் முயற்சியில் அவர் விக்கெட்டை பறிகொடுக்க, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன் குவித்தது. ராயுடு 27 ரன் (14 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), சான்ட்னர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னோ பந்துவீச்சில் பிஷ்னோய், மார்க் வுட் தலா 3, ஆவேஷ் 1 விக்கெட் வீழ்த்தினர்.இதையடுத்து, 20 ஓவரில் 218 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை காட்ட லக்னோ அணி ரன் குவித்தது. இறுதியில் சிஎஸ்கே அணியின் அபார பந்து வீச்சால் லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன் எடுத்து 12 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

அந்த அணியின் மேயர்ஸ் அதிகபட்சமாக 53 ரன் ( 22 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். நிக்கோலஸ் பூரன் 32 ரன், ஆயுஷ் படோனி 23 ரன் எடுத்தனர். சிஎஸ்கே பந்துவீச்சில் மொயின் அலி 4 விக்கெட், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட் வீழ்த்தினர். நடப்பு சீசனில் சென்னை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்து 2 புள்ளிகள் பெற்றது.

The post ருதுராஜ் அதிரடி அரை சதம்: லக்னோவை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் appeared first on Dinakaran.

Tags : Ruduraj ,Chennai Super Kings ,Lucknow ,Chennai ,IPL league ,Lucknow Super Giants ,
× RELATED ருதுராஜ் 69, ஷிவம் துபே 66* சூப்பர் கிங்ஸ் 206 ரன் குவிப்பு