×
Saravana Stores

பொங்கல் விடுமுறையையொட்டி கோவை குற்றாலத்துக்கு 19 ஆயிரம் பேர் வந்தனர்: ரூ.10 லட்சம் வசூல்

கோவை:  கோவை குற்றாலத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டிகடந்த ஆறு நாட்களில் 19 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். கோவை சாடிவயல் அருகே கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி உள்ளது. சமீபத்தில் பெய்த பருவமழையின் காரணமாக நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டி கொண்டு இருக்கிறது. பொங்கல் தொடர் விடுமுறையை அடுத்து கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படையெடுத்தனர். காலை முதல் மாலை வரை நீர்வீழ்ச்சியில் குளியல் போட்டு கொண்டாடினர். கோவை மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்தனர். பொங்கல், காணும் பொங்கல் தினத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்தது.  கூட்டம் காரணமாக சாடிவயல் செக்போஸ்டில் இருந்து நீர்வீழ்ச்சிக்கு செல்ல கூடுதல் வேன்கள் இயக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரே நேரத்தில் அனைவரும் நீர்வீழ்ச்சியில் குளிக்க முடியவில்லை. இதனால், வனத்துறையினர் வரிசையில் அனுப்பினர்.

 சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், வனத்திற்குள் செல்பவர்களை கண்காணிக்கவும் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் போளூவாம்பட்டி ரேஞ்சர் ஆரோக்கியசாமி தலைமையில் கூடுதல் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், கடந்த 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இந்த 6 நாட்களில் பெரியவர்கள் 16,594 பேர் மற்றும் குழந்தைகள்  3,261 பேர் என மொத்தம் 19 ஆயிரத்து 855 பேர் குற்றாலத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக கடந்த 16ம் தேதி 4,710 பேர், 17ம் தேதி 4,683 பேர் மற்றும் 18ம் தேதி 3,728 பேர் குவிந்தனர்.

பொங்கல் விடுமுறையின் மூலம் வனத்துறைக்கு ரூ.10 லட்சத்து 24 ஆயிரத்து 420 வசூலாகியுள்ளது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், “கடந்த 6 நாட்கள் பொங்கல் விடுமுறையில் மொத்தம் 19 ஆயிரத்து 855 பேர் கோவை குற்றாலத்திற்கு வந்துள்ளனர். பொங்கல் மற்றும் காணும் பொங்கல் நாட்களில் வழக்கத்திற்கு மாறாக சற்று கூட்டம் அதிமாக இருந்தது. சனி, ஞாயிறுகளில் கூட்டம் குறைந்தது. மேலும், குற்றாலத்திற்கு இன்று (நேற்று) விடுமுறை அளிக்கப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது” என்றனர்.

Tags : holiday ,Coimbatore Courtallam ,Pongal ,Pongal Vacation , Pongal , Coimbatore, Rs 10 lakhs
× RELATED மாயமான நர்சிங் மாணவி மீட்பு