×

மகனுடன் சொத்து தகராறு ஊடகத்தினரை தாக்கி விரட்டியடித்த மோகன்பாபு

திருமலை: தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்த மூத்த நடிகர், மோகன்பாபு. இவருக்கு ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளதாம். இந்நிலையில் மோகன்பாபுவுக்கும், அவரது மகன் மனோஜுக்கும் இடையே கடந்த ஓராண்டாக சொத்து தகராறு இருந்து வருவதாக தெரிகிறது. சொத்தை பிரித்து தராததால் 2 தினங்களுக்கு முன் மனோஜ் தந்தையை தாக்கியுள்ளார். பதிலுக்கு மோகன்பாபுவும் மகனை தாக்கினாராம்.

இதுதொடர்பாக இருவரும் ஒருவருக்கு ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மோகன்பாபு, மனோஜ் சண்டையை சமரசம் செய்ய, மோகன்பாபுவின் மகளும் நடிகையுமான லட்சுமி மன்சசு கடந்த சில தினங்களுக்கு முன் மும்பையில் இருந்து ஐதராபாத் வந்தார். சமரசம் ஏற்படவில்லை. இதனால் லட்சுமி மும்பைக்கு சென்றுவிட்டார்.

இந்த சம்பவங்களால் மோகன்பாபு வசிக்கும் ஐதராபாத் ஜல்பள்ளி வீட்டிலும், மூத்த மகன் மனோஜ் வீட்டிலும், இளைய மகன் விஷ்ணு வீட்டில் என 3 பேரின் வீடுகளிலும் ஆண் பவுன்சர்கள், பெண் பவுன்சர்கள் நேற்று நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் மோகன்பாபுவின் மற்றொரு மகன் மஞ்சு விஷ்ணு நேற்று வெளிநாட்டில் இருந்து ஐதராபாத் வந்தார். மோகன் பாபு வீட்டிற்கு சென்ற மஞ்சு மனோஜ் வாகனத்தை விஷ்ணுவின் பவுன்சர்கள் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் உள்ளே சென்றனர். அப்போது மோகன்பாபு டிவி சேனலின் மைக் பிடித்து உடைத்து ஊடகவியலாளர்கள் மீது தாக்கினார். உடனே பாதுகாவலர்களும் அவர்களை தாக்கி கேமிரா, மைக்கை உடைத்து அடித்து விரட்டியடித்து கதவை இழுத்து மூடினர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. தாக்குதலில் ஈடுபட்ட மோகன் பாபுவுக்கு ஊடக துறையினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

Tags : Mohanbabu ,Mohan Babu ,Manoj ,
× RELATED சொத்து சண்டையால் விபரீதம்:...