செய்யூர், ஜூலை 11: செய்யூரில் 800 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) 1971ம் ஆண்டு கலைஞரால் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பைத் திட்டமிடல், மேம்படுத்துதல், செயல்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவை சிப்காட் நிறுவனத்தின் குறிக்கோள்கள் ஆகும். சிப்காட் தோற்றுவிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 20 மாவட்டங்களில், 7 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உட்பட 40,839 ஏக்கர் நிலப்பரப்பில் 40 தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 53 ஆண்டுகளில், 3,275 தொழில் நிறுவனங்கள் உருவாவதற்கும், அதன்மூலம் மொத்தம் சுமார் 1.83 லட்சம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 8.15 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் சிப்காட் நிறுவனம் முக்கிய காரணியாகத் திகழ்கிறது. சிப்காட் நிறுவனம் மூலம் பல்வேறு இடங்களில் சிப்காட் தொழிற் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட மண்டலங்களில் அமைந்துள்ள சிப்காட் தொழிற் பூங்காக்கள் மற்றும் முக்கிய தொழில் நிறுவனங்களின் வருகையினால் துறை சார்ந்த தொகுப்புகளாக உருப்பெற்றுள்ளன.
சிப்காட் தொழிற்பூங்காக்களில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முன்னணி தொழில் நிறுவனங்கள் அமையப்பெற்றுள்ளதால், மாநிலத்தின் நிலையான முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு இது முக்கிய பங்களித்து வருகிறது. இதனால், தளவாடங்கள், விருந்தோம்பல் மற்றும் சில்லறை விற்பனை போன்ற துணை சேவைகள் மூலம் மறைமுக வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது. இத்தகைய தொழில்துறை பூங்காக்களின் வளர்ச்சி சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்த சொத்து மதிப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, தூத்துக்குடியில் உள்ள சிப்காட் தொழில்துறை பூங்கா பொருளாதார வளர்ச்சியைடைந்துள்ளது மற்றும் அதிகரித்த தேவை மூலம் உள்ளூர் சொத்து மதிப்புகளை உயர்த்தியுள்ளது.
இந்நிலையில், செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் செய்யூரில், சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று, 11.3.2025 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும், இப்பகுதியின் பொருளாதாரம் மேம்படும் எனவும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாகவும் இத்திட்டம் இருந்து வருகிறது.
தற்போது, இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி பெறுதல் போன்ற முக்கியப் பணிகளை விரைந்து முடித்து, இத்திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செய்யூர் பகுதி மக்கள் இந்த சிப்காட் தொழிற்பூங்கா திட்டத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இப்பகுதி இளைஞர்கள் வேலை தேடி வெளியூர்களுக்குச் செல்வதைத் தடுத்து, உள்ளூரிலேயே வேலைவாய்ப்பை உருவாக்கும் என அவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அரசின் துரித நடவடிக்கையால் இத்திட்டம் விரைவில் நிறைவேற வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த எதிர்பார்ப்பாக உள்ளது.
The post 800 ஏக்கர் பரப்பளவில் அறிவிக்கப்பட்ட செய்யூர் சிப்காட் திட்ட பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
