×

100 சதவீத தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, 2023-24ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சென்னை பள்ளி மாணவர்களின் 100 சதவீத தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, ஆசிரியர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கல்விச் சுற்றுலாவினை மேயர் பிரியா நேற்று ரிப்பன் கட்டிட வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கடந்த 2022-23ம் கல்வியாண்டிற்காக ஆகஸ்ட் 2023 மற்றும் செப்டம்பர் 2023 மாதம் கொடைக்கானல், ஏற்காடு, ஒகேனக்கல் மற்றும் போன்ற இடங்களுக்கு 408 ஆசிரியர்கள் தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, மார்ச் 2024ம் ஆண்டு 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த 282 பட்டதாரி ஆசிரியர்கள், 12ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த 238 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 520 ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் மற்றும் தேசிய தொழில்நுட்பக் கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

அதன்படி, நேற்று, 175 ஆசிரியர்களும், வரும் 23ம்தேதி அன்று 175 ஆசிரியர்களும், 30ம்தேதி 170 ஆசிரியர்களும் தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வாயிலாக கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் குமரகுருபரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post 100 சதவீத தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா: மேயர் பிரியா தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Mayor Priya ,Chennai ,Mayor ,Priya ,
× RELATED மாநகராட்சியின் 7 மண்டலங்களில் கட்டிட...