×

பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட பொங்கல் தொகுப்பு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட பொங்கல் தொகுப்பு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். “பொங்கலோ பொங்கல்” என்று சொல்லும்போதே மக்கள் மனங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. தமிழர் தம் ஊனோடு, உயிரோடு, உணர்வோடு கலந்த விழாவாக தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் அமைந்துள்ளது. இத்தகைய சிறப்புமிக்க தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ”1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும்” என்று அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு இலவச வேட்டி-சேலைகள் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம் சைதாப்பேட்டை, சின்னமலையில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தையும், இலவச வேட்டி – சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தின் மூலம், ரூ.249.76 கோடி செலவில் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவர்.

மேலும், பொங்கல் திருநாளையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி – சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் எண்ணிக்கையிலான வேட்டிகள் மற்றும் 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் எண்ணிக்கையிலான சேலைகள் நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,224 நியாய விலைக்கடைகளில் நேற்று (9.1.2025) முதல் 13.1.2025 வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் நேற்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டது. இப்பணிக்கு கூட்டுறவுத்துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கைத்தறித்துறையைச் சேர்ந்த சுமார் 50,000 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின நிறைவுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, அனைத்து மத மக்களும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் மறைந்த முதலமைச்சர் கொண்டுவந்த திட்டம் தான் இது. பொங்கல் தொகுப்பாக ஒரு கிலோ பச்ச ரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலை உள்ளிட்டவை தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய 2கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் டோக்கன் 99 சதவீதம் மக்களுக்கு வழங்கப்பட்டு விட்டது எனவும் டோக்கன் வாங்காதவர்கள் ரேஷன் கடைகளில் நேரடியாக வந்து பொருட்களை பெற்று கொள்ளலாம் என பேசினார்.

இந்நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மகேஷ்குமார், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை செயலாளர் அமுதவல்லி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட பொங்கல் தொகுப்பு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Pongal festival ,Pongal ,Chennai ,Pongalo Pongal ,Tamils ,Pongal collection ,
× RELATED பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க கரும்புகள் வருகை