×

யார் போட்டி? யார் பின்வாங்கல்? ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் திருவிழா

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது. இத்தேர்தலில் திமுக கூட்டணியில் ஏற்கனவே போட்டியிட்ட காங்கிரஸ் அல்லது திமுகவே போட்டியிடுமா? என்பது குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. ஆனால், அதிமுக தரப்பில் போட்டியிடுவது பற்றிய எவ்வித தெளிவான முடிவும் இல்லாமல் உள்ளது. 2021 சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல்களில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதனால் 2024ம் ஆண்டு நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது.

தற்போது அதிமுக பல அணிகளாகப் பிரிந்து உள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த வழக்கில் இரட்டை இலை சின்னம் தனக்கே சொந்தம் என ஓபிஎஸ் ஒரு மனுவை தாக்கல் செய்து உள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதே பிரச்னை 2023ம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எதிரொலித்தது. ஆனால், அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. தற்போது மீண்டும் பிரச்னை எழுந்து உள்ளதால் இரட்டை சிலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய சின்னத்தில் அதிமுக நிற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படலாம் என்று கூறப்படுவதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆனால், அடுத்தாண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சி தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டால் கட்சிக்கும், பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமைக்கும் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர். அதே வேளையில் தொடர் தோல்வியை அதிமுக சந்தித்து வருவதால் இந்த தேர்தலிலும் தோல்வியடைந்தால் தன்னுடைய தலைமை மீதான இமேஜ் மேலும் டேமேஜ் ஆகும் என்று எடப்பாடி பழனிசாமி கருதுவதாக தெரிகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கும் வகையில் வருகின்ற 11ம் தேதி சென்னையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

இந்நிலையில் பாஜ கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக முடிவெடுக்கும் வகையில் வருகிற 11ம் தேதி மாலை சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட தமாகா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அக்கட்சியின் துணை தலைவர் விடியல் சேகர் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தமாகா போட்டியிடுவதா? அல்லது கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரிப்பதா? என்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும். அதிமுக, பாஜ உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலில் செயல்பட வேண்டும் என்பது எங்களது விருப்பம். ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது என்றார். இதில் தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்தால் கூட்டணி கட்சியான தேமுதிகவும் தேர்தலை புறக்கணிக்கும் என்றே கூறப்படுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததால் தேமுதிகவும் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து கூட்டணி தலைவர்களுடன் பேசி அறிவிக்கப்படும் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாமகவில் ராமதாஸ் பேரனுக்கு இளைஞர் அணி தலைவர் பதவி தந்ததில் கருத்து வேறுபாடு காரணமாக மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அதேவேளையில் கூட்டணி குறித்து நான் பார்த்து கொள்கிறேன் என்று ராமதாஸ் தெரிவித்து உள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமகவை கூட்டணியில் சேர்ப்பதில் அதிமுக, பாஜ இடையே கடும் போட்டி நிலவியது. இரு கட்சி தலைவர்களும் தைலாபுரம் தோட்டத்துக்கு படையெடுத்தனர். இறுதியில் பாஜவுடன் பாமக கூட்டணி வைத்தது. சிபிஐ வழக்கு, அமைச்சர் பதவி உள்ளிட்ட காரணங்களுக்காகவே அன்புமணி பாஜவுடன் கூட்டணி வைத்ததாக பரவலாக பேசப்பட்டது. ஆனால் இதில் ராமதாசுக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்பட்டது. இதை பகிரங்கமாக மோடி பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ராமதாஸ் வெளிப்படுத்தி இருந்தார். தற்போது அன்புமணியுடன் ஏற்பட்ட மோதலால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாமக வெளியேற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை அன்புமணி கட்சியை உடைத்தால் ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அன்புமணி தலைமையில் ஒரு அணியும் செயல்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பாமகவும் இந்த தேர்தலை புறக்கணிக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. இதுதவிர நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று சீமான் அறிவித்து உள்ளார்.

வேட்பு மனு தாக்கல் நாளை துவக்கம்: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ். இளங்கோவன் கடந்த டிசம்பர் 19ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் நேற்று முன்தினம் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் என அறிவித்தார். இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பு மனுக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் நாளை (10ம் தேதி) முதல் 17ம் தேதி வரை பெறப்பட உள்ளது. 18ம் தேதி வேட்பு மனுக்கள் பரீசிலனை செய்யப்படும். தொடர்ந்து, வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள 20ம் தேதி இறுதி நாளாகும். இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு டெபாசிட் தொகையாக ₹10 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ₹5 ஆயிரம் செலுத்தினால் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை அரசு விடுமுறை நீங்கலாக, 10, 13, 17 ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. காலை 11 மணி முதல் மதியம் 3 மணிக்குள் ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்ய வேண்டும். மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கான முன்னேற்பாடு பணிகளை மாநகராட்சி அலுவலர்கள் செய்து வருகின்றனர். தேர்தல் விதிமுறையையொட்டி, மாநகராட்சி அலுவலகத்தின் நான்கு திசைகளிலும் உள்ள மீனாட்சி சுந்தரனார் சாலை, கச்சேரி வீதி சாலை, நேதாஜி சாலை, காந்திஜி சாலை, காமராஜ் சாலைகளில் 100 மீட்டர், 200 மீட்டர் எல்லைக்கோடு போடப்பட்டுள்ளது. இதில், 100 மீட்டர் எல்லைக்கோட்டுற்குள் வந்தவுடன் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா? என போலீசார் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர் மூலம் கண்காணிக்கப்பட உள்ளனர்.

இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி திடீர் மனு : ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கராவிடம் சமூகநீதி மக்கள் கட்சி சார்பில் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைவையொட்டி, தற்போது தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கால அவகாசம் மிகவும் குறைவு. 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை மனு தாக்கலுக்கு அறிவிக்கப்பட்ட நாட்களில் 5 நாட்கள் அரசு விடுமுறை உள்ளது. 3 நாட்கள் மட்டுமே அரசு வேலை நாட்கள். தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி வேட்புமனு தாக்கல் செய்ய அரசு வேலை நாட்களில் 7 முதல் 10 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும். ஆனால் தற்போது 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய அவகாசம் இருக்கிறது.
பொங்கல் பண்டிகையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைத்து, அடுத்த மாதம் நடத்த வேண்டும். கடந்த 2019ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதேபோல் பொங்கல் பண்டிகை காரணமாக பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் வேண்டுகோளை ஏற்று ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் அறிவிப்பு எப்போது?: ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் சட்டமன்ற வேட்பாளரை தேர்வு செய்ய 3வது முறையாக தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஏற்கனவே கடந்த 2021 தேர்தலிலும், திருமகன் ஈவெரா மறைவுக்கு பிறகு 2023ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலிலும் வாக்களித்திருந்தனர். தற்போது அடுத்த மாதம் 5ம் தேதி நடக்கும் இடைத்தேர்தலிலும் வாக்களிக்க பொதுமக்கள் தயார் ஆகி வருகின்றனர். இந்த தேர்தலில் இரு முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர்களே போட்டியிட்டனர். இந்த முறை யார் வேட்பாளர்? என்ற எதிர்பார்ப்பில் வாக்காளர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் 3வது முறையாக தந்தை பெரியார் குடும்பத்தை சேர்ந்த ஈவிகேஎஸ்.இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அதிமுக கூட்டணியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, தமாகா வேட்பாளர் யுவராஜா போட்டியிட்டு, மறைந்த திருமகன் ஈவெராவிடம் தோல்வியுற்றார். 2023ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிட்டு, ஈவிகேஎஸ். இளங்கோவனிடம் தோல்வியுற்றார். தற்போது அதிமுக கூட்டணி வேட்பாளர் யார்? தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. மனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய 3 நாட்கள் மட்டுமே உள்ளது. இதனால் வேட்பாளர்கள் அறிவிப்பு எப்போது என்று எதிர்ப்பார்ப்பு எழுந்து உள்ளது.

The post யார் போட்டி? யார் பின்வாங்கல்? ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Erode East ,Election Commission ,Congress ,DMK ,by-election festival ,Erode ,East assembly ,
× RELATED ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.5-ல் இடைத்தேர்தல்..!!