- கல்காஜி
- பிரியங்கா காந்தி
- டெல்லி பாஜக
- பிதுரி
- புது தில்லி
- தில்லி
- சட்டமன்ற உறுப்பினர்
- ரமேஷ் பிதுரி
- முதல் அமைச்சர்
- அதிசி
- பாஜக
புதுடெல்லி: டெல்லியில் அடுத்த மாதம் நடக்கும் சட்டமன்ற தேர்தலில், கல்காஜி தொகுதியில் முதல்வர் அடிசியை எதிர்த்து பாஜ வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ, எம்பி.யான ரமேஷ் பிதூரி போட்டியிடுகிறார். இத்தொகுதியில் நேற்று முன்தினம் இவர் பிரசாரம் செய்த போது, ‘அடுத்த மாதம் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் நான் வெற்றி பெற்றால், இத்தொகுதியில் உள்ள சாலைகள் அனைத்தையும் பிரியங்கா காந்தியின் கன்னத்தை போல் வழவழப்பாக போடுவேன்,’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். சமூக வலைதளங்களில் இந்த பேச்சு அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. பிதூரியின் இந்த பேச்சுக்கு கல்காஜி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும், மகளிர் காங்கிரஸ் தேசிய தலைவரான அல்கா லம்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘தனது வழக்கமான அநாகரீகமான மொழியால், பெண்களை மீண்டும் ஒருமுறை பிதூரி அவமதித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் கவுரவத்துக்கும், பெண்களுக்கும் மரியாதை கொடுக்கத் தெரியாத இதுபோன்ற ஒருவரை கல்காஜி மக்கள் தேர்ந்தெடுப்பார்களா? அவர் தனது பேச்சுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவருடைய இந்த பேச்சு குறித்த தங்களின் நிலையை பாஜ மூத்த தலைவர்கள் தெரிவிக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார். மேலும், பிதூரியின் உருவபொம்மையை எரித்து மகளிர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். தனது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிதூரி மன்னிப்பு கேட்டு எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தெற்கு டெல்லியில் இருந்து 2 முறை எம்பி.யாகவும், துக்ளகாபாத் சட்டப்பேரவை தொகுதியில் இருந்து 3 முறை எம்எல்ஏ.வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரமேஷ் பிதூரி, சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ் அலியை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், மக்களவையின் உரிமை குழு விசாரணைக்கு ஆளானார்.
The post கல்காஜி தொகுதியில் வெற்றி பெற்றால் பிரியங்கா காந்தி கன்னம் போல் வழவழப்பான சாலை போடுவேன்: டெல்லி பாஜ வேட்பாளர் பிதூரி சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.