×

மகளிருக்கு இலவச பஸ் பயண திட்டம் நிறைவேற்ற தமிழகத்துக்கு வருகிறது ஆந்திர அமைச்சர் குழு: ஆய்வு செய்து அறிக்கை தயாரிப்பு

திருமலை ஆந்திராவில் மகளிருக்கு இலவச பஸ் பயண திட்டத்தை நிறைவேற்ற அமைச்சர் குழுவினர் தமிழகத்துக்கு வருகின்றனர். ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, போக்குவரத்துத்துறை அமைச்சர் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி மற்றும் ஆர்டிசி அதிகாரிகளுடன் பஸ்களில் இலவச பயண திட்டம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது முதல்வர் சந்திரபாபு நாயுடு, ‘பெண்களுக்கு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் இலவச காஸ் சிலிண்டர் திட்டத்தை ஏற்கனவே செயல்படுத்தியுள்ளோம்.

இலவச பஸ் பயணத்தையும் அமல்படுத்த வேண்டும். சங்கராந்தியிலிருந்தே தொடங்கலாம்’ என்றார். ஆனால் இலவச பயணத்துக்கு 3,500 பஸ்களும், 11,500 ஊழியர்களும் தேவைப்படுவதாகவும், இந்த திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு மாதந்தோறும் ரூ.265 கோடி கூடுதல் சுமை ஏற்படும் எனவும் ஆர்டிசி அதிகாரிகள் தெரிவித்தனர். குறைந்தபட்சம் 2 ஆயிரம் புதிய பஸ்கள் அல்லது வாடகை பஸ்கள் இல்லாமல் இலவசப் பயண உத்தரவாதத்தை அமல்படுத்த முடியாது. மேலும் மாநிலத்தில் அரசு பஸ்களில் பயணிகளின் சராசரி பயண விகிதம் 69 சதவீதம் வரை இருக்கிறது. பெண்களுக்கு இலவச பயணம் அமல்படுத்தப்பட்டால் இது 94 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றனர்.

அப்போது கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு, பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் பெண்கள் இலவச பஸ் பயணம் செய்வது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு, அமைச்சர்கள் அடங்கிய துணைக்குழுவிற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.

இதற்காக உள்துறை அமைச்சர் அனிதா, மகளிர் நலத்துறை அமைச்சர் சந்தியா ராணி மற்றும் ஆர்டிசி அதிகாரிகள் குழு ஆய்வுக்காக கர்நாடகா செல்கிறது என்று முதல்வரிடம் அமைச்சர் ராம் பிரசாத் ரெட்டி தெரிவித்தார். மேலும் ‘சமீபத்தில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் இலவச பயணத்தை அமல்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் சிரமங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் விரைவில் தமிழ்நாடு சென்று ஆய்வு செய்து முழுமையான அறிக்கை சமர்பிக்கப்படும்’ என்றார்.

 

The post மகளிருக்கு இலவச பஸ் பயண திட்டம் நிறைவேற்ற தமிழகத்துக்கு வருகிறது ஆந்திர அமைச்சர் குழு: ஆய்வு செய்து அறிக்கை தயாரிப்பு appeared first on Dinakaran.

Tags : AP MINISTERIAL COMMITTEE ,Tamil Nadu ,Thirumalai Andhra ,Chief Minister ,Chandrababu Naidu ,Chief Secretariat ,AP State Amravati ,Transport Minister ,Mandidalli Ramprasad Reddy ,RTC ,
× RELATED ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து: தமிழ்நாடு மின்வாரியம்!