×

ஜீன்ஸ் ஆடை அணிந்ததால் கார்ல்சன் தகுதி நீக்கம்: ஃபிடே செஸ் நிர்வாகம் அதிரடி

நியுயார்க்: ஃபிடே செஸ் போட்டிக்கு ஜீன்ஸ் ஆடையுடன் வந்ததால் முன்னாள் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அமெரிக்காவின் நியுயார்க் நகரில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) சார்பில் உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டிகளில் கலந்து கொண்ட தற்போதைய சாம்பியனும், ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றவருமான நார்வேயின் செஸ் கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், 9வது சுற்றில் விளையாட நேற்று முன்தினம் ஜீன்ஸ் பேன்ட் சட்டையுடன் வந்தார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த நடுவர், ஆடையை மாற்றி வரும்படி கூறியுள்ளார். கார்ல்சன் முடியாது என கூறியதால், அவருக்கு ரூ.17 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 9வது சுற்றில் ஆட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கார்ல்சன், ரேபிட், பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து விலகிக் கொள்வதாக கூறி வெளியேறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஃபிடே வெளியிட்ட அறிக்கை: செஸ் விளையாட்டில் நீண்டகாலமாக ஆடைக் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த விதிகள் பாரபட்சமின்றி அனைவருக்கும் பொதுவானவை. தான் அணிந்து வந்த ஜீன்ஸ் ஆடைகளை கார்ல்சன் மாற்ற மறுத்ததால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆடை மாற்றும் வரை அவருடன் ஆடும் போட்டியாளர் பெயர் வெளியிடப்படவில்லை. கார்ல்சன் தொடர்ந்து பிடிவாதம் பிடித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

போட்டிக்கு ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து வந்திருந்த மற்றொரு போட்டியாளர் நெபோம்னியாச்சியிடமும் செஸ் விதிமுறை எடுத்துக் கூறப்பட்டது. அவர், தன் ஷூவை மாற்றிக்கொண்டு ஆட்டத்தில் பங்கேற்றார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கார்ல்சன் கூறுகையில், ‘முட்டாள்தனமான விதிகளை பின்பற்றி வருகின்றனர். நாளை வேறு ஆடையை அணிந்து வருவதாக கூறினேன். ஆனால், ஃபிடே நிர்வாகத்தினர் ஒப்புக் கொள்ளவில்லை. ஃபிடேவின் நடவடிக்கைகளால் சோர்வடைந்துள்ளேன். அவர்களுடன் இனி எதையும் செய்ய விரும்பவில்லை’ என்றார்.

The post ஜீன்ஸ் ஆடை அணிந்ததால் கார்ல்சன் தகுதி நீக்கம்: ஃபிடே செஸ் நிர்வாகம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Carlsen ,FIDE chess administration ,New York ,Magnus Carlsen ,FIDE ,World Rapid and Blitz Chess Championships ,International Chess Federation ,New York City, USA… ,Dinakaran ,
× RELATED உலக செஸ் பிளிட்ஸ் ஓபன் பிரிவில்...