×

காலமறிந்து களம் காணும் மகரம்

கால தாமதம் கூடாது

காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது என்று நினைக்கும் மகர ராசி முதலாளிக்கும் மேலதிகாரிக்கும் காலதாமதம் செய்வதும் வேலையை இழுத்தடிப்பதும் பிடிக்காது. நியாயமான காரணங்களாக இருந்தால் கூட அவர் மனம் ஒப்புக்கொண்டாலும் அறிவு ஒப்புக்கொள்ளாது. மாற்று ஏற்பாடுகள் செய்து வைத்துவிட்டு நீங்கள் சொன்ன நேரத்தில் வேலைக்கு வந்திருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார். ஏதோ வாழ்நாள் முழுக்க அவருக்கு வேலை செய்வதற்காகவே பணியாளர்கள் பிறப்பெடுத்தனர் என்ற எண்ணத்தில் அவர்களிடம் இந்த வேலையைச் செய்து முடித்து விட்டு வேறு வேலைக்கு போங்கள் என்று கறாராகச் சொல்லி விடுவார். மனைவி குழந்தைக்கு சுகம் இல்லை என்று மருத்துவமனை போக வேண்டும் என்று அவரிடம் கேட்டாலும் வேலையை முடித்து விட்டு தான் போகச் சொல்வார். ஆனால் மருத்துவமனை செலவுக்கு அலுவலகத்தில் இருந்து பணம் கொடுக்க ஏற்பாடு செய்வார். நாயகன் படத்தில் சிறுவன் கேட்டது போல மகர ராசி முதலாளி நல்லவரா கெட்டவரா என்று இறைவனைப் பார்த்து தான் கேட்க வேண்டும். இறைவனின் படைப்பில் இப்படி ஒரு விசித்திரம்.

பணியாளரிடம் எதிர்பார்ப்பு

மகர ராசி முதலாளி/ அதிகாரியிடம் பணி செய்யும் வேலையாட்கள் அவருடைய அகந்தைக்கு தீனி போடும் வகையில் எப்போதும் அவரிடம் வேலையைப் பற்றியே பேச வேண்டும். வேலையில் அவர் காட்டும் திறமை, பொறுப்புணர்ச்சி அதை நிறைவேற்ற தான் எந்நேரமும் துடித்துக் கொண்டிருப்பதாக சொல்ல வேண்டும். அதெல்லாம் செய்திடலாம் சார் முடித்துவிடலாம் சார் என்று அலட்சியமாக பதில் சொல்லக்கூடாது. ‘நீங்கள் சொன்னபடியே செய்கிறோம் சார் உங்க கூட நாங்க இருக்கிறோம் சார் நீங்க சொன்னதை செஞ்சு முடிச்சிட்டு தான் சார் நாங்க கிளம்புவோம் என்று கூற வேண்டும்.

பணியாளுக்குப் பொறுமை அவசியம்

மகர ராசி முதலாளி அல்லது மேலதிகாரி செயல் திட்டங்களையும் பணி நோக்கத்தையும் விவரிக்கும் போது மிக மிக பொறுமையாக இருந்து கேட்க வேண்டும். குறுக்கே பேசக்கூடாது. பணியாட்கள் தங்கள் ஆலோசனைகளை அப்போது சொல்லி இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லக்கூடாது. அவர் முகத்தில் அடிப்பது போல பதில் சொல்லுவார். காரணம் உங்கள் ஆலோசனைகளைப் பற்றியும் அவர் யோசித்து தான் இந்த முடிவு எடுத்திருப்பார். என்னென்ன மறுப்பு வரும் என்னென்ன மாற்று ஆலோசனைகள் சொல்வார்கள் என்பதையெல்லாம் அவர் விடிய விடிய சிந்தித்து தான் இந்த பணி திட்டத்தை வகுத்திருப்பார். எனவே அவருடைய பணித்திட்டங்கள் செயல்திட்டங்கள் பற்றி யாரும் அக்கறை கொள்ளவோ வினா எழுப்பவோ தேவையில்லை. அவர் சொன்னதைச் சொன்னபடி செய்தாலே போதும்.

விசுவாசத்தை காட்டுங்கள்

மகர ராசி முதலாளியிடம் பணியாளர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றால் அடிக்கடி உங்களின் நேர்மையை விசுவாசத்தை அவருக்கு உணர்த்த வேண்டும். அவரிடம் கீழ்ப்படிதலுடன் இருப்பதாகவும் அவர் சொன்னதை அப்படியே பின்பற்றுவதாகவும் அடிக்கடிஅவரிடம் உறுதி செய்ய வேண்டும். ‘ நீங்க சொன்ன மாதிரி தான் சார்’ என் என்ற தொடரை அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.

பணியாளர் தேர்வு

மகர ராசி முதலாளி பணியாட்களின் நேர்மையை அறிந்திருப்பார். பணியாட்களைத் தெரிவு செய்யும்போது அடிமை போல் வேலை செய்யக்கூடிய ஆட்களை தான் அவர் தேர்ந்தெடுப்பார். தன் குடும்பம், தன் பொழுதுபோக்கு, தன் நேரம் பற்றி எல்லாம் பேசக்கூடிய ஆட்களை அவர் தேர்ந்தெடுக்க மாட்டார். காரணம் அவரைப் பொறுத்தவரை குடும்பம், பொழுதுபோக்கு போன்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். வேலைதான் முதலில் அவருக்கு முக்கியமானதாகும். எனவே பணியாட்களின் நேர்மை பற்றி அவருக்குத் தெரிந்தாலும் கூட அதை பணியாளர்களின் வாயால் கேட்டும் உறுதி செய்வதில் அவருக்கு ஒரு தனி மகிழ்ச்சி. வெளியே அதனை வெளிப்படுத்த மாட்டார்.

முன்னேற்றப் பாதை

மகர ராசி முதலாளி தொழிலின் தொடக்கம், முன்னேற்றம், வெற்றி ஆகியவற்றைக் குறித்து அவரிடம் அடிக்கடி கேட்டு அறிவது பணியாட்களுக்கு நல்லது. சுய தம்பட்டமாக இருந்தாலும் கூட அவர் தன்னுடைய உழைப்பு மற்றும் நேர்மை குறித்து அடிக்கடி நினைத்துப் பார்ப்பார். அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவார். தன்னுடைய விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதைத் தன்னைப் போன்ற பணக்காரர்களிடம் அதிகாரிகளிடம் அவர் பேச மாட்டார். காரணம், அவர்களும் இதே பாதையில் இன்று உயர்ந்த நிலைக்கு வந்திருக்கலாம். எனவே அந்த இடத்தில் அவருடைய முயற்சியும் வெற்றியும் பெரிய விஷயம் கிடையாது. ஆனால் தன்னைவிட எளியவர்களிடம் அதை பிரஸ்தாபிப்பார். விரிவாக பேசுவார். அவர்களும் அவரை வியப்போடு பார்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

பழமைவாதி

மகர ராசி முதலாளி அதிகாரி என்னதான் அமெரிக்காவில் படித்து விட்டு வந்தவராக இருந்தாலும் கூட இன்னும் பழம் பஞ்சாங்கமாகத்தான் இருப்பார். பணியாட்கள் பத்து மணிக்கு நேரத்திற்கு 10 நிமிடம் முன்னதாக வரவேண்டும். வந்தவுடன் முதலாளி இருந்தால் அவருக்கு ஒரு வணக்கம் சொல்ல வேண்டும். அவரை இரண்டு வார்த்தை பாராட்டி பேச வேண்டும். இன்றைக்கு தாங்கள் செய்யப் போகின்ற வேலையைப் பற்றி ஒரு முன் அறிக்கையை கொடுக்க வேண்டும். நேற்று அவருடைய ஆலோசனைப்படி வேலையில் இருந்த பிரச்னை தீர்ந்தது குறித்து பாராட்ட வேண்டும். இவற்றை எல்லாம் ஒரு பத்து
நிமிடத்தில் முடித்துவிட்டு சரியாகப் பத்து மணிக்குத் தன் வேலையை தொடங்கி விட வேண்டும். இடைவேளை, அரட்டை கூடாது. மகர ராசி முதலாளியின் நிறுவனத்தில் அல்லது அலுவலகத்தில் தொழிலாளர்கள் 10:00 மணிக்கு உள்ளே வந்து பத்தரை மணிக்கு வேலை தொடங்குவது அம்முதலாளியால் சகித்துக் கொள்ள முடியாத பெரும் குற்றமாகும். எப்போதும் வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். வெளியே போய் காபி குடிக்கிறேன் என்று இடைவேளையில் கதை பேசக்கூடாது. முடிந்தவரை பணியிடத்திற்கு காபி வந்துவிடும்படி ஏற்பாடு செய்திருப்பார். வேலை செய்யும்போது வீட்டுக் கதை, சினிமா கதை பேசுவதை கூட இவர் விரும்புவதில்லை. வேலையைப் பற்றி மட்டும் பேச வேண்டும். வீணான விஷயங்களைப் பேசி தன் சக்தியை வீணாக்காமல் வேலை செய்வதில் தன் முழு சக்தியையும் பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பார். எனவே ஆடிப் பாடி வேலை செய்தால் அலுப்பு இருக்காது என்ற கதை எல்லாம் இவரிடம் நடக்காது. வாயை மூடிக்கொண்டு உட்கார்ந்து வேலையை மட்டும் பார்க்க வேண்டும். வேடிக்கை பார்க்கவும் கூடாது.

அன்பும் அக்கறையும் உண்டு

மகர ராசி முதலாளி பணியாட்களிடம் கடுமையாக நடந்து கொண்டாலும் வேலை சரியான நேரத்தில் சரியான அளவில் முடிய வேண்டும் என்பதில் கருத்துச் செலுத்தினாலும் கூட பணியாட்களின் தனிநலன் குறித்து மிகவும் அக்கறை காட்டுவார். அவர்கள் குடும்பத்திற்கான மருத்துவச் செலவு பிள்ளைகளுக்கான கல்விச் செலவு போன்றவற்றை தாராளமாக செய்வார். அவற்றில் எந்த கேள்வியும் கேட்க மாட்டார். தன்னால் முடிந்த இடத்தில் தனக்குத் தெரிந்த நண்பர்களிடம் சொல்லி இவர்களில் பணியாட்களுக்காகவும் அவர்கள் குடும்பத்தினருக்காகவும் பரிந்துரை செய்து அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றைப் பெற்று தர முயல்வார்.
(அடுத்த இதழில்…)

முனைவர் செ.ராஜேஸ்வரி

The post காலமறிந்து களம் காணும் மகரம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED உண்மையை உண்மை என்று சொல்லும் தைரியம்