×

சென்னையில் நாளை மறுநாள் வேலைவாய்ப்பு முகாம்: 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து வரும் 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாம், கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இதில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் இல்லை. இதில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) பதிவேற்றம் செய்ய வேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னையில் நாளை மறுநாள் வேலைவாய்ப்பு முகாம்: 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai District Collector ,Rashmi Siddharth Jagade ,Tamil Nadu ,
× RELATED பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த...