மயிலம்: மயிலம் அடுத்துள்ள கூட்டேரிப்பட்டு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று இரவு சுவற்றில் துளைபோட்டு மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இங்கு சூப்பர்வைசர் சங்கர், விற்பனையாளர்கள் திருவேங்கடம், ராமமூர்த்தி, சோழன், அருள்தாஸ் ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். நேற்று இரவு 10 மணி அளவில் டாஸ்மாக் கடையில் விற்பனையை முடித்துக்கொண்டு, விற்பனையான பணத்தை எடுத்துக் கொண்டு ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் மதுக்கடை அருகே கிடக்கும் காலி மதுபாட்டில்கள் எடுக்க சிலர் வந்துள்ளனர் அவர்கள் டாஸ்மாக் பார் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனை அடுத்து உடனடியாக கடையின் சூப்பர்வைசர் சங்கர் மற்றும் மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறிதுநேரத்தில் அங்கு வந்த மயிலம் போலீசார் உடைக்கப்பட்ட பாரின் கதவை திறந்து பார்த்தபோது அங்கு டாஸ்மாக் கடையின் பக்கவாட்டு சுவற்றில் ஒரு ஆள் செல்லும் அளவிற்கு துளை இடப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில், நள்ளிரவு நேரத்தில் டாஸ்மாக் கடைக்கு கொள்ளையடிக்க வந்த மர்மநபர்கள் கடையின் பக்கவாட்டு சுவற்றில் கடப்பாரையால் உடைத்து ஒரு ஆள் உள்ளே நுழைவும் அளவுக்கு துளைபோட்டுள்ளனர்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் பணம் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த அவர்கள் பின்னர் அங்கிருந்த மதுபாட்டில்களை திறந்து போதிய அளவு குடித்து விட்டு பணம் கிடைக்காத ஏமாற்றத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளைபோட்டு மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் மயிலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டாவது முறையாக கொள்ளை முயற்சி
தற்போது கொள்ளை முயற்சி நடந்த டாஸ்மாக் கடை ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் உள்ளது. எற்கனவே கடந்த 2018ம் ஆண்டு இதே கடையில் விற்பனையாளராக இருந்த திருவேங்கடம் விற்பனையான பணத்துடன் போலீஸ் பாதுகாப்புடன் சென்றபோது கொள்ளயைர்கள் வழிமறித்து திருவேங்கடம் மற்றும் போலீசார் அரிவாளால் வெட்டிவிட்டு இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.
அடுத்த ஆண்டு (2019) இதே கடையில் விற்பனையாளர் மற்றும் சூப்பர்வைசர் ஆகியோர் பணத்துடன் வெளியேவந்தபோது மர்ம நபர்கள் அவர்களை தாக்கி ரூ.47 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச்சென்றனர். மேலும் 2021ம் ஆண்டு இதே கடையில் சுவற்றில் துளைபோட்டு கொள்ளையடிக்க முயற்சி நடந்தது. தற்போது மீண்டும் நேற்று நள்ளிரவு கடையின் சுவற்றில் துளைபோட்டு கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
The post மயிலம் அருகே நள்ளிரவில் துணிகரம்: டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளைபோட்டு கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.