×

ஒடிசா சட்டப்பேரவை, மக்களவை தேர்தலின்போது வெளியிடப்பட்ட வாக்கு சதவீதத்தில் பெரிய வேறுபாடு: பிஜு ஜனதா தளம் குற்றச்சாட்டு

ஒடிசா: ஒடிசாவில் நடைபெற்ற சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல்களில் பதிவான மொத்த வாக்கு சதவீதத்திற்கும் எண்ணப்பட்ட வாக்குகளின் சதவீதத்திற்கும் இடையே 30 சதவீதத்திற்கும் அதிகமாக வித்தியாசம் இருந்ததாக பிஜு ஜனதா தளம் கட்சி பரபரப்பு குற்றசாட்டை கூறி உள்ளது. ஒடிசாவில் உள்ள 21 மக்களவை தொகுதிகளுக்கும் 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 21 மக்களவை தொகுதிகளில் 20 தொகுதிகளை பாஜக வென்றது. எஞ்சி இருந்த ஒரு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமானது. 147 சட்டப்பேரவை தொகுதிகளில் 78 தொகுதிகளை பாஜக கைப்பற்றி ஆட்சி கட்டிலில் அமர்ந்தது.

வெறும் 51 தொகுதிகளில் மட்டுமே வென்ற பிஜு ஜனதா தளம் எதிர்கட்சியானது. ஒடிசா மக்களின் மனதில் 24 ஆண்டுகளாக சிம்மாசனம் இட்டிருந்த நவீன் பட்நாயக் முதலமைச்சர் பதவியை விட்டு இறங்க இந்திய சூழல் ஏற்பட்டது. ஒடிசாவில் தேர்தல் முடிந்து கடந்த 8 மாதங்களாக பாஜகவின் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகளில் மிக பெரிய வேறுபாடு இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் பிஜு ஜனதா தளம் தற்போது நேரில் புகார் அளித்துள்ளது. தற்போது பாஜகவின் முதலமைச்சராக உள்ள மோகன் சரண் வென்ற தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்த போது பதிவான வாக்கு சதவிகிதத்திற்கும் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்ட சதவீதத்திற்கும் இடையே 30.64 சதவீத வித்தியாசம் இருப்பதாக பரபரப்பு புகாரை பிஜு ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது.

தேர்தல் நடத்தும் அலுவலரால் எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையும் மாவட்ட தேர்தல் அதிகாரி அளித்த அறிக்கையில் உள்ள எண்ணிக்கையும் பெரிய அளவில் மாறுபட்டு இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறது. மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளை மொத்த வாக்குகளுடன் ஒப்பிடும் போது தேர்தலின் முடிவையே பாதிக்கும் அளவிற்கு அதிகமாக வாக்குகள் பதிவாகி இருப்பதாக பிஜு ஜனதா தளம் குற்றம்சாட்டி இருக்கிறது. தனி தனியாக வாக்கு சாவடிகளில் எத்தனை வாக்குகள் பதிவாகின என்பதை அறிவதற்காக மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் 17சி படிவத்தை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மூலமாக கேட்ட போதும் இதுவரை தங்களுக்கு கிடைக்க வில்லை என பிஜு ஜனதா தளம் குற்றம்சாட்டி இருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்ட நாளில் இரவு 11.45 மணிக்கு பதிவான வாக்கு எண்ணிக்கை 2 நாட்களுக்கு பின்னர் தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி தரவுகளில் இருந்து 10 சதவீத வாக்குகள் வித்தியாசத்துடன் இருந்தது ஏன் என்று பிஜு ஜனதா தளம் கேள்வி எழுப்பி இருக்கிறது. இந்தியாவில் நடத்தப்பட்ட தேர்தல்களில் மிகப்பெரிய வாக்கு சதவீத வேறுபாடுகளோடு ஒடிசா தேர்தல் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு தேர்தலில் பதிவான வாக்குகள் மற்றும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கு இடையே 2 சதவீதம் மட்டுமே வித்தியாசம் இருந்த சூழலில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள வித்தியாசம் தற்போது 30 சதவீதத்தை தாண்டியது எப்படி என்பது பிஜு ஜனதா தளத்தின் கேள்வியாகும் தங்கள் புகார்களின் மீது தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவை அடுத்து வாக்கு சீட்டு முறையை ஆதரிப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று பிஜு ஜனதா தளம் தெரிவித்திருக்கிறது.

The post ஒடிசா சட்டப்பேரவை, மக்களவை தேர்தலின்போது வெளியிடப்பட்ட வாக்கு சதவீதத்தில் பெரிய வேறுபாடு: பிஜு ஜனதா தளம் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Odisha Assembly ,Lok Sabha ,Biju Janata Dal ,Odisha ,Biju ,Janata ,Dal ,Odisha… ,
× RELATED பாஜ புதிய தலைவர் பிப்ரவரியில் தேர்வு