×

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளுங்கள்

திருமங்கை ஆழ்வார் தமது திருக்குறுந்தாண்டகம் என்னும் பிரபந்தத்தில் ஒரு பாசுரத்தைப் பாடுகின்றார். அதில், நிரந்தர ஆனந்தத்தைத் தருகின்ற எம்பெருமான் திருவருளை விட்டுவிட்டு, இந்த உலகியல் பொருட்களைத் தேடி, ஓடி, சலித்து, ஓய்ந்து, தங்களுக்கு அளிக்கப்பட்ட அற்புதமான மனிதப் பிறவியை வீணாக்கி விடுகிறார்கள் என்று மனம் நொந்து பாடுகின்றார்.

வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசம் ஈன்ற,
தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார்,
மானிடப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க, தந்தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக் குறுதியே வேண்டி னாரே.

சம்ஸாரிகள் (நம்மைப் போன்ற உலகியலில் உழல்பவர்கள்) தேகத்தை (உடம்பை) பூண் கட்டிக்கொள்ளவிருக்கிறார்களேயன்றி எம்பெருமானை மருவி வாழ்வாரில்லையே! என வருந்திப் பேசுகிறார்.காரணம், மனிதப்பிறவி எளிதில் கிடைக்காத பிறவி. புல்லாகி பூண்டாகி என்று படிப்படியாக, செய்த புண்ணியத்தின் பலனாக, அமைந்த உயர்ந்த ஒரு பிறவிதான் மனிதப் பிறவி.இந்த மனிதப் பிறவியைத் தவற விட்டு விட்டால், மீண்டும் எந்தப் பிறவியில் பிறப்போம் என்பதை நம்மால் முடிவு செய்ய முடியாது.‘‘இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ?” என்றுதான் மகான்கள் சொல்கிறார்கள். அதைத்தான் மனம் நொந்து இந்த பாசுரத்தில் திருமங்கையாழ்வார் பாடுகின்றார்.
“ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக் குறுதியே வேண்டினாரே.”என்ற வரியை கவனித்துப் பாருங்கள்.‘குரம்பை’ என்று குடிசைக்குப் பெயர். உடலானது ஆத்மா வசிக்கும் குடிசை. இந்த உலகத்துப் பாமரர்கள் அநித்யமான (நிச்சயமில்லாத ) உடம்பை வாடாமல் வதங்காமல் வைத்திருந்தால் போதுமென்று பார்க்கிறார்களேயன்றி, நித்தியமான ஆத்ம வஸ்து உஜ்ஜீவிக்கும் வழியைச் சிறிதும் நாடுகின்றார்களில்லையே என்பதே இப்பாசுரத்தில் ஆழ்வார் சொல்ல வரும் செய்தி.எது நித்தியம் இல்லையோ அதை நித்தியம் என்று நினைக்கிறோம். தினசரி முகநூலையோ, இணையதளத்தையோ இல்லை கட்செவி அஞ்சலையோ திறந்தால் நமக்கு நல்ல செய்திகளை விட, எதிர்பாராத இழப்புக்களைப்பற்றிய செய்திகள்தான் அதிகம் வருகின்றன. நிலையாமையைப் பற்றி நம்முடைய முன்னோர்களும் சமய நூல்களும் மிக அருமையாகக் கூறியிருக்கின்றனர்.இது குறித்து திருவள்ளுவர் அற்புதமான குறட்பாவை நமக்காக இயற்றி யிருக்கின்றார்.நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்து இவ் வுலகு.இந்த உலகத்துக்கே பெருமை நேற்று இருந்தவன் இன்று இல்லை என்பதுதான் என்று அழுத்தமாகச் சொல்லுகின்றார்.“நெருநல்” என்பதற்கு நேற்று என்று மட்டும் பொருள் அல்ல. சற்று முன்னால் என்று கடந்த காலத்தையும் நெருநல் என்ற சொல் குறிக்கும்.ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் நன்றாகப் பேசிக்கொண்டிருந்தார். இப்போது இல்லாமல் போய்விட்டார் என்று சொல்வதை நாம் இயல்பாகப் பார்க்கிறோம். எது எல்லாம் நிரந்தரம் என்று நினைக்கிறோமோ, அதெல்லாம் நிரந்தரமல்ல; நிச்சயமும் அல்ல என்கின்ற புரிந்துணர்வோடுதான் வாழவேண்டும் என்ற உண்மையை இந்தச் செய்திகள் உணர்த்துகின்றன.யாருக்கு எந்த வண்டி என்று தெரியவில்லை. பேசிக்கொண்டிருந்தவர்கள் திடீரென்று ஒரு வண்டியில் ஏறி மறைந்து விடுவதுபோன்று வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. இதை ஆன்றோர்கள் திரும்பத் திரும்பச் சொல்வதற்குக் காரணம் நம்மை அச்சப்படுத்துவதற்காக அல்ல. ஒருவேளை அந்த அச்சத்தோடு வாழ்ந்தாலும்கூட வாழ்வு ஒழுங்காகவும் சிறப்பாகவும் இருக்கும் என்கிற நோக்கமும் அவர்களுக்கு இருந்திருக்கலாம். ஏதாவது ஒன்று வாழ்வில் உறுதியாக நடக்கத்தான் போகிறது என்றால் மகான்கள் இந்த விஷயத்தைத்தான் சொல்லுகின்றார்கள்.திருமூலர் இதை ஒரு வாழ்வியல் நிகழ்வாகவே காட்சிப்படுத்துகிறார்.

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.

இதை என்னுடைய வாழ்க்கையிலேயே நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். கணவருக்குச் சப்பாத்தி பிடிக்கும் என்று சப்பாத்தி செய்து வைத்தார் அந்த அம்மையார். கணவனார் வெளியிலே போய்விட்டு வந்தார். அவருக்கு சூடாக சப்பாத்தி செய்து முதலில் ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தார் கலகலப்பாகப் பேசியபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தவர், இரண்டாவது சப்பாத்தி வரை காத்திருக்காமல், ‘‘ எனக்கு என்னவோ போல் இருக்கிறது. நான் பெஞ்ச்சில் ஓய்வெடுக்கிறேன். நீ சூடாக இரண்டாவது சப்பாத்தி செய்தவுடன் என்னைக் கூப்பிடு” என்று சொன்னார் அந்த அம்மையாரும் ஆகட்டும் என்று சொல்லி. சுடச்சுட இரண்டாவது சப்பாத்தியை போட்டுக்கொண்டு வந்து எழுப்பும் போது அவர் இல்லை.கவியரசு கண்ணதாசன் எழுதிய அற்புதமான வரிகள் தான் நினைவுக்கு வருகிறது

இன்று நீ நாளை நான் என்றும் நாம் என்று இரு
நன்று செய்ந் நன்றி சொல் நடத்து உன் வாழ்வினை
நெஞ்சமுன் சந்நதி நித்தமும் நிம்மதி
ஆழமான வார்த்தை அல்லவா
நிலையாமையைப்பற்றி மிக அற்புதமாகச் சொன்னார்கள் ஆழ்வார்கள்.
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்
சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து ஆர்வினவிலும்
வாய் திறவாதே அந்தக்காலம் அடைவதன்முன்னம்
மார்வம் என்பது ஓர் கோயில் அமைத்து மாதவன் என்னும்
தெய்வத்தை நாட்டி ஆர்வம் என்பதுஓர் பூஇடவல்லார்க்கு
அரவதண்டத்தில் உய்யலும்ஆமே.

எழுத்தாளர் சுஜாதா ஒரு குறு நாடகம் எழுதினார். அதில் ஒரு வயதான பணக்காரர் படுத்த படுக்கையாகிவிடுவார். அதாவது கோமா ஸ்டேஜ். அவருடைய சொத்து பத்துக்கள் ஆவணங்கள் இவற்றையெல்லாம் எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உறவினர்கள் அவர் தலைமாட்டில் நின்று கொண்டு “எப்படியாவது ஒரு பத்து நிமிஷமாவது இவருக்கு நினைவு வரும்படி செய்யுங்கள்” என்று கேட்பது அவர் காதுக்குக் கேட்கும். ஆனால், அவரால் பதில் சொல்ல முடியாது. இந்த இக்கட்டான கொடுமையான மருத்துவ நிலையைத்தான் 1300 வருடங்களுக்கு முன்னால் தம் பாசுரத்தில் பெரியாழ்வார் பதிவு செய்கின்றார்.இதைவிட மேலாகச் சொல்லுகின்றார் யார் உளர்?காலம் உங்கள் கையில் இப்போது இருக்கிறது. நாளை இருக்குமா என்பது நிச்சயமில்லை. இருக்கும் காலத்தை இயன்றவரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.ஒரு பழமொழி சொல்வார்கள். மிக எளிமையாக இருக்கும்.“காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.”இதை பெரும்பாலும் வாய்ப்பு இருக்கின்றபோது நீ பயன்படுத்திக்கொள் என்பதாகத்தான் நினைக்கிறார்கள். ஆனால் காற்று என்பது மூச்சுக்காற்று. அந்த மூச்சுக்காற்று இருக்கும் வரைதான் அதைத் தாங்கி நிற்கும் உடல் நிற்கும். செயல்படும். அதனால் சிலபல காரியங்களை அறிந்து கொள்ள முடியும்.அந்த மூச்சு இருக்கும் பொழுதே அவனை நினைத்து வணங்குகின்ற அற்புதமான காரியங்களைச் செய்துகொள் என்று சொல்லப்பட்டதாகத்தான்
தெரிகிறது.பட்டினத்தார்,

காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே
பாலுண் கடைவாய்ப் படுமுன்னே – மேல்விழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு

– என்றார்.என்னிடம் ஒரு அன்பர் கேட்டார்.

“அது என்ன, எந்த புராணம், பாசுரம், பாடல் எடுத்தாலும் நிலையாமை பற்றியே இருக்கிறது?”

“நிலைத்த வாழ்வைப் பெறவே நிலையாமையைப் பாடினார்கள்” என்றேன், நான்.

தேஜஸ்வி

The post காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளுங்கள் appeared first on Dinakaran.

Tags : Thirumangai Alwar ,
× RELATED திருமங்கை ஆழ்வார் பத்து நாள் உற்சவம் கண்டருளும் திருநகரி