காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனு அளித்தும், இதுவரை பட்டா வழங்காததை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில், கூடியிருக்க இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனு அளித்து, பல்வேறு நிலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை பட்டா வழங்காத அரசு அதிகாரிகள், தங்களை அலைய விடுவதாகக்கூறி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துடன் குடியேறும் போராட்டம் குறித்து அறிவிப்பினை மாவட்ட தலைவர் பாலாஜி வெளியிட்டார்.
அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனு அளித்தும் பட்டா வழங்காததையும், மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கும் அதிகாரிகளை கண்டித்தும் மாநில துணை தலைவர் பாபு தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனு அளித்து ஒரு வருடமாகியும், எந்த முன்னேற்ற நடவடிக்கை இல்லை எனவும், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்குவதோடு, நடைமுறையில் உள்ள நடைமுறைகளில் நடைமுறைப்படுத்த வேண்டும். 35 கிலோ இலவச ரேஷன் அரிசி வழங்க வேண்டும். உதவித்தொகை காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடியேறும் போராட்டம் அறிவித்துள்ளதால், அப்பகுதியில் ேபாலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முனுசாமி, மாவட்ட பொருளாளர் ஹரி கிருஷ்ணன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள், நல சங்க உறுப்பினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
The post வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துடன் போராட்டம்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.