×

கேரளாவில் இருந்து மீன் கழிவுகளுடன் வந்த 4 வாகனங்கள் பறிமுதல்: 5 பேர் கைது

புதுக்கடை: கேரள மாநிலத்திலிருந்து குமரி எல்லைக்கு கழிவுகள் கொண்டு வந்த இரண்டு வாகனங்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இவ்வாறு பொதுமக்கள் வாகனங்களை மடக்கி பிடித்தால் செக்போஸ்ட் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில் புதுக்கடை, கைசூண்டி சந்திப்பு வழியாக கருங்கல் செல்லும் சாலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் சென்று கொண்டிருந்த மீன் வாகனத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது.

ஊர் பொதுமக்கள் விரட்டி சென்று அந்த வாகனத்தை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து சோதனையிட்ட போது, அதில் அழுகிய மீன்கள் காணப்பட்டன. வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், அதன் டிரைவர் கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த தீபு(40), நந்து (31) ஆகிய இருவரை கைது செய்தனர். இதேபோல் மாலை 6 மணியளவில் மீண்டும் அதேவழியாக வந்த கூண்டு லாரியிலும் துர்நாற்றம் வீசியதால் அதை பொதுமக்கள் லாரியை மடக்கி பிடித்து புதுக்கடை போலீசில் ஒப்படைத்தனர். அதை சோதனையிட்டதில் அதிலும் கெட்டுப் போன மீன்கள் இருந்தன.

அதை குமரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் கொட்ட கொண்டு வந்ததாக லாரி டிரைவர் கேரளாவை சேர்ந்த அஜி(49) என்பவர் கூறினார். அவரை கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் நேற்று அதிகாலை களியக்காவிளை சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாகன சோதனை செய்து கொண்டிருந்த களியக்காவிளை போலீசார், கோழிவிளை சோதனை சாவடி வழியாக இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த கூண்டு லாரி மற்றும் செப்டிக் டேங்க் கழிவுகள் கொண்டு சென்ற வாகனங்களை தடுத்து விசாரித்தனர். இதில் செப்டிக் டேங்க் ஓட்டி வந்தது மணிகண்ட தேவ்வை கைது செய்து செப்டிக் டேங்க் லாரியை பறிமுதல் செய்தனர். அதேபோல கூண்டு லாரியை ஓட்டி வந்த திருநெல்வேலி டவுண் பகுதியை சேர்ந்த வள்ளி முருகன்(55) என்பவரை கைது செய்தனர்.

The post கேரளாவில் இருந்து மீன் கழிவுகளுடன் வந்த 4 வாகனங்கள் பறிமுதல்: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kerala ,Pudukada ,Kumari border ,SP ,Dinakaran ,
× RELATED புதுக்கடை அருகே புகையிலை பொருட்கள் விற்ற பெண் மீது வழக்கு