*வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
ஈரோடு : ஈரோட்டில் மதுபோதையில் ஓட்டி வரப்பட்ட கார் வீட்டின் முன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு, செங்கோடம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரேவதி. இவர் தனது தாயார் மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில், இவரது வீட்டுக்கு வெளியில் பயங்கர சத்தம் கேட்டது. இதையடுத்து, அவர்கள் வெளியில் வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்கம் ஒரு கார் கவிழ்ந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், கார் கவிழ்ந்த சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் வெளியில் வந்தனர்.
பின்னர், காரை ஓட்டி வந்தவர் காயமடைந்து காருக்குள் சிக்கிக் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து, குடியிருப்புவாசிகள் காரின் கண்ணாடியை உடைத்து அவரை மீட்டனர். அப்போது அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை தனியார் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துவிசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் சக்தி நகர் பகுதியை சேர்ந்த வருண் (24) என்பதும், மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்த அவர், நிலை தடுமாறி ரேவதியின் வீட்டின் முன்புறம் உள்ள மரத்தில் மோதி கார் கவிழ்ந்ததும் தெரியவந்தது. ரேவதியின் வீட்டின் முன்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சைக்கிள் ஆகியவற்றின் மீது கார் மோதி சேதமடைந்தன. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதையடுத்து போலீசார், மதுபோதையில் காரை அதிவேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தியவர் குறித்து விசாரித்து வருகின்றனர். இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு வாகனங்களை அதிவேகத்தில் ஓட்டி வருவது இப்பகுதியில் அதிகரித்து வருவதாகவும், இதனை கட்டுப்படுத்த போலீசார் இரவு ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இரவு நேரத்தில் திடீரென வீட்டின் முன் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post ஈரோட்டில் மது போதையில் ஓட்டி வரப்பட்ட கார் வீட்டின் முன் கவிழ்ந்ததால் பரபரப்பு; 2 பைக், சைக்கிள் சேதம் appeared first on Dinakaran.