×

25 வீடுகளை உடைத்து சூறையாடிய ‘புல்லட்’ யானையை வனத்திற்குள் விரட்டும் பணி: 2 கும்கிகள் உதவியுடன் 50 வனத்துறையினர் மும்முரம்

பந்தலூர்: நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரம்பாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனத்துறையால் ‘புல்லட்’ என அழைக்கப்படும் யானை ஊருக்குள் புகுந்து பல்வேறு அட்டகாசங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த யானை சேரங்கோடு டேன்டீ, படச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் 25க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தாக்கி சூறையாடியது. மேலும் உணவு பொருட்களை தின்று சேதம் செய்வது, வாகனங்களை தாக்குவது, விவசாய பயிர்களை சேதம் செய்வது என யானையின் அட்டகாசம் தொடர்ந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்நிலையில் யானையை மயக்கஊசி செலுத்தி பிடிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவின்பேரில் முதுமலையில் இருந்து வனத்துறையின் அதிவிரைவு குழுவினர் மற்றும் கூடுதல் வனப்பணியாளர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் என 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபடுள்ளனர். இதற்காக முதுமலை பகுதியில் இருந்து பொம்மன் மற்றும் சீனிவாசன் ஆகிய இரண்டு கும்கி யானைகளை வரவழைத்து சேரங்கோடு சிங்கோனா பகுதியில் அட்டகாசம் செய்யும் ‘புல்லட்’ யானையை டிரோன் மூலம் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post 25 வீடுகளை உடைத்து சூறையாடிய ‘புல்லட்’ யானையை வனத்திற்குள் விரட்டும் பணி: 2 கும்கிகள் உதவியுடன் 50 வனத்துறையினர் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Pandalur ,Cherambadi forest reserve ,Nilgiris district ,Cherangode ,Dandi ,Patacheri ,Dinakaran ,
× RELATED புல்லட் யானையிடம் இருந்து தப்பிக்க...