×

மார்கழியிலும் விற்பனை மந்தமில்லை அய்யலூர் வாரச்சந்தை கூடியது ஆடு, கோழி அமோக விற்பனை

*ரூ.60 லட்சம் வரை விற்றதால் மகிழ்ச்சி

வேடசந்தூர் : அய்யலூர் வாரச் சந்தையில் ரூ.60 லட்சம் வரை ஆடு, கோழிகள் விற்பனையாயின. மார்கழி பிறந்தாலும் விற்பனை பெரிதும் பாதிப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே அய்யலூரில் பிரசித்தி பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது.

இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை கூடும் சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனையாகும். தீபாவளி, பொங்கல், ரம்ஜான், பக்ரீத் பண்டிகை காலங்களில் சந்தையில் விற்பனை உச்சம் தொடும். அதேசமயம், புரட்டாசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் விற்பனை மந்தமாகவே இருக்கும்.

கார்த்திகை முடிந்து மார்கழி பிறந்த நிலையில் நேற்று காலை அய்யலூரில் வழக்கம்போல ஆட்டுச்சந்தை கூடியது. ஆடுகள், கோழிகள் மற்றும் வியாபாரிகள் வருகை அதிகமாக இருந்தது. 10 கிலோ செம்மறியாடு ரூ.6,500ல் இருந்து ரூ.7,500 வரையும், 10 கிலோ வெள்ளாடு ரூ.8,000ல் இருந்து ரூ.9,000 வரையும் விற்பனையானது.

நாட்டுக்கோழி கிலோ ரூ.450ல் இருந்து ரூ.500 வரையும், சண்டை சேவல்கள் தரத்திற்கு ஏற்ப ரூ.3,000 முதல் ரூ.10,000 வரையும் விற்பனையாகின. கடந்த கார்த்திகை மாதத்தில் 10 கிலோ செம்மறியாடு ரூ.5,500ல் இருந்து ரூ.6,500 வரையும், 10 கிலோ வெள்ளாடு ரூ.6,000 இருந்து ரூ.7,000 வரையும் விற்பனையானது.

வியாபாரிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கூறுகையில், ‘‘கார்த்திகை மாதத்தில் வியாபாரம் மந்தமாக இருந்தது. தற்போது மார்கழி பிறந்த நிலையில் நேற்று கூடிய சந்தையில் வியாபாரம் நன்றாக இருந்தது. ஒரே நாளில் சந்தையில் ரூ.60 லட்சத்திற்கு ஆடு, கோழிகள் விற்பனையாகின’’ என்றனர்.

The post மார்கழியிலும் விற்பனை மந்தமில்லை அய்யலூர் வாரச்சந்தை கூடியது ஆடு, கோழி அமோக விற்பனை appeared first on Dinakaran.

Tags : Ayyalur ,Vedasandur ,Dinakaran ,
× RELATED வியாபாரிகளுக்கு வருவாய் ‘பொங்கல்’;...