திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகளுடன் கொத்தடிமையாக இருந்த மரக்காணத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 11 பேர் மீட்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே முன்னூர் கிராமத்தில் 3 இருளர் குடும்பத்தினர் உள்ளனர். இந்த குடும்பத்தை சேர்ந்த ராஜி(56), வேலியப்பன்(46), கனகா(40), விக்னேஷ்(20) மஞ்சு(19), வள்ளியம்மா(50), சக்திவேல்(20), குப்பு(38) மற்றும் 2 குழந்தைகள் உள்பட11 பேர் கடந்த 3 மாதங்களுக்கு முன் கரும்பு வெட்டும் பணிக்காக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டத்திலுள்ள கர்லம்பாக்கம் கிராமத்துக்கு சென்றுள்ளனர்.
இவர்களை மரக்காணம் அருகே செட்டிநகர் கிராமத்தை சேர்ந்த காளியப்பன் என்ற இடைத்தரகர் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு வேலைக்கு சென்றதும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.22 ஆயிரம் கொடுத்துள்ளனர். இந்த பணத்தை வாங்கிக் கொண்டவர்கள் 3 மாதங்களாக கரும்பு வெட்டும் பணியை செய்து வந்துள்ளனர். மூன்று மாதங்களாக 11 பேரையும் வெளியில் விடாமல் கொத்தடிமையாக வைத்து தோட்டத்தின் உரிமையாளர் வேலை வாங்கி உள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மரக்காணம் வருவாய்த் துறையினர் 11 பேரையும் மீட்கக் கோரி திருத்தணி வருவாய் வட்டாட்சியருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் அதிகாரிகள் 11 பேரையும் அங்கிருந்து மீட்டு வேன் மூலம் பத்திரமாக மரக்காணத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மரக்காணம் வந்தடைந்தவர்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து வட்டாட்சியர் பழனி விசாரணை நடத்தினார். அதில் குடும்பத்துடன் வேலைக்கு போன தங்களை கரும்பு வெட்டுவதற்காக கொத்தடிமையாக நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து மீட்கப்பட்டவர்களுக்கு காலை உணவு வழங்கிய வட்டாட்சியர் பழனி அனைவரையும் வருவாய்த்துறை அதிகாரிகளின் பாதுகாப்போடு சொந்த ஊரான முன்னூர் கிராமத்துக்கு அனுப்பி வைத்தார்.
The post திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகளுடன் கொத்தடிமைகளாக இருந்த 11 பேர் அதிரடியாக மீட்பு: மரக்காணத்தை சேர்ந்தவர்கள் appeared first on Dinakaran.