×

திருத்தணியில் ரூ.45 கோடியில் தரம் உயர்த்தப்பட்டு அதிநவீன வசதிகளுடன் தயார் நிலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை: 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு

திருத்தணி: கிராம பகுதி மக்களுக்கு உயர்ந்த மருத்துவ சேவை வழங்கும் வகையில், திருத்தணியில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரூ.45 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் 4 அடுக்குமாடி கட்டிட பணிகள் நிறைவடைந்து, திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், ஆந்திர எல்லை பகுதியில் அமைந்துள்ள திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களில் பெரும்பாலான மக்கள் வசித்து வரும் நிலையில், மருத்துவ சிகிச்சை பெற திருத்தணி அரசு பொது மருத்துவமனையை நாடுகின்றனர்.

தினமும் 800க்கும் மேற்பட்ட வெளிப்புற நோயாளிகள், 150க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மேலும், கர்ப்பிணிகள் பிரசவ வார்டும் செயல்பட்டு வருகின்றது. விபத்து மற்றும் அவசர சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே வசதிகள் மருத்துவமனையில் இல்லாத நிலையில் நோயாளிகள் திருவள்ளூர், சென்னை அரசு பொது மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. இதனால், அவசர சிகிச்சை கிடைப்பதில் ஏற்படும் கால தாமதத்தால், பலர் உயிரிழக்கும் அபாயம் நிலவுகிறது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, கடந்த 2022ம் ஆண்டு மருத்துவ கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், திருத்தணி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். தொடர்ந்து, முதலமைச்சரின் சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய கட்டிடம் கட்ட பொதுப்பணித்துறை சார்பில், ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் கட்டிடப் பணிகள் கடந்த 2023ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது முடிவடைந்து திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.

* புதிய கட்டிடத்தில் உள்ளவை
தரை தளம்: நோயாளிகள் பெயர் பதிவு, அவசர சிகிச்சை, நோயாளிகள் காத்திருப்பு அறை, மருந்தகம், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன்.
முதல் தளம்: வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை, மருத்துவ அலுவலர் அலுவலகம், 18 படுக்கைகள்.
2வது தளம்: செவிலியர்கள், மருத்துவர் அறை, மருத்துவ பரிசோதனை மையம், காத்திருப்பு அறை, பொது வார்டு ஆண்களுக்கு 70 படுக்கை வசதி.
3வது தளம்: செவிலியர் மருத்துவர் அறைகள், பொது வார்டு ஆண்கள், பெண்களுக்கு 70 படுக்கை வசதி.
4வது தளம்: மருத்துவர், செவிலியர் அறைகள், மருத்துவ பரிசோதனை மையம், ஆர்த்தோ வசதிகள்.

* அதிநவீன வசதிகள்
திருத்தணி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், புதிய கட்டிடத்தில் 213 படுக்கைகளுடன் 24 மணிநேரமும் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, எம்.ஆர்.ஐ.ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, அனைத்து வகையான அறுவை சிகிச்சைகள், கர்ப்பிணிகளுக்கு 24 மணி நேரமும் பிரசவம், ஆர்த்தோ, பல், குழந்தைகள் சிறப்பு பிரிவு, காது, மூக்கு தொண்டை, தோல் வியாதி உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ வசதிகள் செய்யப்பட உள்ளன.

* 6 ஏக்கர் பரப்பளவில் புதிய கட்டிடம்
திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அருகில் 6 ஏக்கர் பரப்பளவில் காலி நிலத்தில் 67,967 சதுர அடியில் தரை தளம் உட்பட 4 அடுக்கு மாடிகள் கொண்ட கட்டிடத்தில் தாழ் தளம், லிப்ட், 3 அறுவை சிகிச்சை மையங்கள், ஸ்கேன், எக்ஸ்ரே அறைகள், நோயாளிகளுக்கு தனித் தனியாக கழிப்பிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, நோயாளிகள் மற்றும் உதவியாளர்கள் காத்திருப்பு அறைகள் மருத்துவர்கள் ஓய்வு அறைகள், உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

* தடையின்றி மருத்துவ சேவைக்கு
மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் மருத்துவ சேவைகள் தொடங்க உள்ள நிலையில், நோயாளிகள் மற்றும் படுக்கையறைகள் எண்ணிக்கைக்கு ஏற்ப 24 மணி நேரமும் நோயாளிகள் சிகிச்சை தடையின்றி பெற ஏதுவாக போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஆய்வக நுட்புநர்கள், மருந்தாளுநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

* கட்டிடப் பணிகள் நிறைவு
மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிந்துள்ள நிலையில், மருத்துவமனையில் கட்டிடம் அமைந்துள்ள பகுதியில் 2,900 சதுர அடிகள் மட்டும் விவசாய நிலம் கணக்கில் உள்ளதால், பொது நிலம் உபயோக பகுதியாக மாற்ற நகராட்சி சார்பில் மாவட்ட நகர் ஊரமைப்பு ஆணையத்தில் மனை அங்கீகாரம் கோரி தாக்கல் செய்துள்ள மனு விசாரணை முடிந்து வரும் 27ம் தேதியுடன் ஆட்சேபனை கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில், மனைப்பிரிவு அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற உடன் மின் இணைப்பு பெற்று விளக்குகள் பொருத்தப்படும் என்று திருத்தணி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்(கட்டுமானம்) முரளி தெரிவித்தார்.

* முதலமைச்சருக்கு நன்றி
திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ கூறியதாவது: திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை மருத்துவ கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், அடுத்து மாவட்ட தலைமை மருத்துவமனையாக கிராமங்கள் நிறைந்த திருத்தணி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். அதன்படி திருத்தணி அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இதனால், திருத்தணி நகர சுற்றுப்புர கிராமமக்கள் மருத்துவ சேவை பெறவும், அவசர சிகிச்சைக்காக திருவள்ளூர், சென்னை பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. திருத்தணி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்திய முதலமைச்சருக்கு திருத்தணி மக்களின் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்.

The post திருத்தணியில் ரூ.45 கோடியில் தரம் உயர்த்தப்பட்டு அதிநவீன வசதிகளுடன் தயார் நிலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை: 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு appeared first on Dinakaran.

Tags : District Government Head Hospital ,Tiruttani ,District Head Hospital ,Tiruvallur district ,District Government Head Hospital in ,emergency department ,
× RELATED திருத்தணியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில்...