- யூடியூபர்
- ஷங்கர்
- பிறகு நான்
- சென்னை
- யூடியூபர் சங்கர்
- மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றம்
சென்னை: தேனியில் விடுதியில் தங்கி இருந்தபோது கஞ்சா வைத்திருந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால் மதுரை மாவட்ட போதை தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை தொடர்ந்து, யூடியூபர் சங்கர் சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த யூடியூபர் சங்கர், கடந்த ஆண்டு தேனி மாவட்டம் பூதிப்புரம் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி இருந்த போது, பழனிசெட்டிப்பட்டி போலீசாருக்கு கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் படி, சங்கர் தங்கி இருந்த அறை மற்றும் அவரது காரில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அவரது காரில் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து பழனிசெட்டிப்பட்டி போலீசார் கஞ்சா வைத்திருந்ததாக யூடியூபர் சங்கர், அவரது உதவியாளர்கள் ராம்பிரபு, ராஜரத்தினம் மற்றும் கஞ்சா விற்பனை செய்த மகேந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியது உட்பட பல வழக்குகளில் அடுத்தடுத்து போலீசாரால் சங்கர் கைது செய்யப்பட்டு, பல்வேறு சட்டப்போராட்டங்களுக்கு இடையே ஜாமீனில் வெளியே வந்தார்.
அதேநேரம் தேனி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் கடந்த ஜூலை 29ம் தேதி மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் யூடியூபர் சங்கருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் இந்த கஞ்சா வழக்கு அதே நீதிமன்றத்தில் தற்போதும் விசாரணையில் உள்ளது.
போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் சங்கர் பலமுறை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நீதிபதி செங்கமல செல்வன், யூடியூபர் சங்கரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். அதை தொடர்ந்து தேனி மாவட்ட போலீசார், சங்கரை கைது செய்ய சென்னை பெருநகர காவல்துறை உதவியை நாடினர். அதனை தொடர்ந்து தி.நகர் துணை கமிஷனர் குத்தலிங்கம் தலைமையிலான தனிப்படையினர் சங்கரை தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து நேற்று அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டார். தேனியில் இருந்து வந்த போலீசார் சங்கரை கைது செய்து சாலைமார்க்கமாக அவரை அழைத்துச் சென்றனர்.
The post காரில் 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாததால் யூடியூபர் சங்கர் மீண்டும் கைது: சாலை மார்க்கமாக தேனிக்கு அழைத்து சென்ற போலீசார் appeared first on Dinakaran.