நெல்லை: நெல்லை அருகே சீவலப்பேரியில் ஆற்றுநீரின் போக்கு குறையாமல் இருப்பதால், உறைகிணறுகளை நெருங்க முடியாமல் ஊழியர்கள் திண்டாடி வருகின்றனர். உறைகிணறுகள் சீரமைப்பு பணிகள் முடிய இன்னும் 15 தினங்கள் வரை ஆகலாம் என கூறப்படுகிறது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பூங்குளத்தில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. ஆற்றின் நீர்வழிப்பாதையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக ஏராளமான உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் 3 தினங்கள் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் ஆற்றில் இருந்த தரைப்பாலங்கள், குடிநீர் குழாய்கள், உறை கிணறுகள் சேதமடைந்தன.
இதில் அதிகபட்சமாக சீவலப்பேரியில் தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்ட 33 உறைகிணறுகள் முற்றிலும் சேதம் அடைந்தன. அங்குள்ள மின்மோட்டார்களும் சேதமடைந்தன. சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, முக்கூடல், விகேபுரம், கொண்டாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் உறைகிணறுகளின் மின்மோட்டார்களும் சேதமடைந்தன. டவுன், மேலநத்தம், சீவலப்பேரி பகுதிகளில் உள்ள தரைப்பாலங்களில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆற்றில் சேதம் அடைந்த உறைகிணறுகள் மற்றும் மின்மோட்டார்களை சீரமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்கான பணியில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் துரித கதியில் செயல்பட்டு வருகின்றனர்.
சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் உறைகிணறுகளும், மின்மோட்டார்களும் சேதம் அடைந்த நிலையில், நேற்று மோட்டார்களை பழுது பார்த்திட ஊழியர்கள் ஆற்றுக்குள் இறங்கி சென்றனர். ஆனால் தண்ணீர் வரத்து குறையாத காரணத்தால், அவர்களால் உறைகிணறுகள் பக்கம் செல்ல முடியவில்லை. உறைகிணறுகளில் மோட்டார் வயர்கள் அறுந்து கிடப்பதோடு, குழாய்களும் உடைந்து கிடக்கின்றன. அவற்றை சீர் செய்தால் மட்டுமே கோவில்பட்டி, விளாத்திக்குளம், விருதுநகர், தாழையூத்து சிப்காட் பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்ய முடியும் என்கிற சூழல் உருவாகியுள்ளது. எனவே அவற்றை சரி செய்திட குறைந்தபட்சம் 15 தினங்கள் வரை ஆக கூடும் என தெரிகிறது. எனவே இப்பணிகள் முடிந்தால் மட்டுமே அருகில் உள்ள மாவட்டங்களுக்கு குடிநீர் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.
The post தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு; உறைகிணறுகளை சீரமைக்க முடியாமல் ஊழியர்கள் திண்டாட்டம்: சீவலப்பேரியில் தண்ணீர் வரத்து குறையவில்லை appeared first on Dinakaran.