×

பழவேற்காட்டில் நேற்று அதிகாலை கடல் சீற்றம் பாறையில் படகு மோதி இரண்டாக உடைந்து விபத்து: 3 மீனவர்கள் உயிர் தப்பினர்; மீன்பிடி வலை சேதம்

பொன்னேரி: பழவேற்காடு பகுதியில் நேற்று அதிகாலை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகு, கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பழவேற்காடு மீனப்பகுதியில், 40 மீனவ கிராமங்கள் கடல் மற்றும் ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. பழவேற்காடு ஏரியானது, இந்தியாவின் 2வது மிகப்பெரிய உவர்ப்பு நீர் ஏரியாக ஆந்திர மாநிலம் வரை பரவி இருக்கிறது. ஆரணி ஆறு மற்றும் பகிங்ஹாம் கால்வாய் வழியாக வரும் நன்னீர், முகத்துவாரம் வழியாக வரும் கடல்நீர் சேர்ந்த உவர்ப்பு நீர் ஏரியாக இது உள்ளது.

பழவேற்காடு ஏரியில் கிடைக்கும் மீன், இறால் வகைகள் சுவையாக இருக்கும் என்பதால் எப்போதும் கிராக்கி அதிகம். இங்குள்ள மீனவர்கள், மீன்பிடி தொழில் மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் பெய்த பலத்த மழையின் காரணமாக ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. பழவேற்காட்டில் கடல் சீற்றமும் காணப்படுகிறது. 5 அடிக்கும் மேல் கடல் அலை எழுந்து சீற்றத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், வழக்கம்போல் இன்று அதிகாலையில் பழவேற்காடு அருகே உள்ள வைரவன் குப்பம் கிராமத்தில் வசிக்கும் மீனவர் இளங்கோ என்பவர், தனக்கு சொந்தமான படகியில் ஜானகிராமன், சுந்தர் ஆகியோருடன் மீன்பிடிக்க சென்றார்.

பழவேற்காடு முகத்துவாரம் அருகே சென்றபோது அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. திடீரென கடலில் படகு கவிழ்ந்தது. மீனவர்கள் கடலில் குதித்து நீந்தி கரை சேர்ந்தனர். படகில் இருந்த மீன்பிடி பொருட்கள் மற்றும் 80 கிலோ மீன்பிடி வலை கடலில் மூழ்கியது. கடல் சீற்றத்தில் படகு முகத்துவாரம் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிக்காக கொட்டப்பட்டுள்ள பாறைகள் மீது இடித்து இரண்டாக உடைந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இல்லாமல் மீனவர்கள் தப்பினர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார், பொன்னேரி மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post பழவேற்காட்டில் நேற்று அதிகாலை கடல் சீற்றம் பாறையில் படகு மோதி இரண்டாக உடைந்து விபத்து: 3 மீனவர்கள் உயிர் தப்பினர்; மீன்பிடி வலை சேதம் appeared first on Dinakaran.

Tags : Pazhaverkadu ,Ponneri ,Pazhaverkadu… ,Dinakaran ,
× RELATED பழவேற்காடு அருகே அடுத்தடுத்து 4 படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்து..!!