தந்தை ராஜசேகரபாண்டியனுக்கு முதலில் கோயில் அமைப்பது குறித்து விளக்குகிறார் மணிகண்டன். ‘‘நமது பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலையில் கோயில் அமைய உள்ள இடத்தை நோக்கி, எனது வில்லில் இருந்து அம்பு எய்வேன். 18 தெய்வங்கள் குடிக்கொண்டிருக்கும் அந்த 18 மலைகளின் மையப்பகுதியில் உள்ள எனது அருளாசிக்காக காத்திருக்கும் ஒரு புனித மரத்தில் அந்த அம்பு போய் தைக்கும். அது யார் கண்ணிற்கும் தெரியாது. உமது கண்ணிற்கு மட்டுமே தெரியும்.
அங்கு இந்த பந்தள தேசத்தை உருவாக்கிய பரசுராமர், கோயில் கருவறையை எழுப்பி, அதில் உலக நன்மைக்காக தியான பீடத்தில் அகங்காரம், மாயை, கர்மா ஆகியவற்றை உணர்த்தும் மூன்று தத்துவங்களையும், ஞானத்தை தரக்கூடிய ஜீவாத்மா, பரமாத்மாவிற்குமான பந்தத்தை குறிக்கும் சின் முத்திரையுடன், குண்டலி சக்தி தவக்கோலத்தில் அமர்ந்த படியான எனது திருமேனியை பிரதிஷ்டை செய்வார்.
கீழ் பகுதியில் மதங்க முனிவர் தவம் செய்த யாக குண்டம் இருக்குமிடத்தில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து இந்திரியங்கள், மனித வாழ்விற்கு தீங்கு விளைவிக்கும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், திசியை, டம்பம் ஆகிய அஷ்ட ராகங்கள். சத்வ, ராஜச, தாமச ஆகிய மூன்று குணங்கள் மற்றும் வித்யை, அவித்யை ஆகிய 18 பொருட்கள் அடங்கிய தத்துவங்களுடன் 18 படிகள் அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு படியிலும் ஒரு தெய்வம் என 18 தெய்வங்களும் குடிகொண்டிருக்கும் வகையில் அமையும் என்பதால் அவை சத்திய மயமான படிகளாக தனி தத்துவங்களுடன் அமையும். நான் சென்று வந்த அந்த பாதையில் (பெரிய பாதை) வரும்போது எரிமேலியில் மகிஷி வதத்திற்கு சண்டையில் எனக்கு உதவிய பூதகணங்களின் தலைவன் வாபூரன், உடும்பாறைகோட்டையில் வந்தடைந்த வயாக்ரபாதர், மகிஷியை வீழ்த்தி ஆனந்ததாண்டவம் ஆடிய மலையான காளைகட்டியில், ஆணவத்தில் இருந்த இந்திரனுக்கு தகுந்த பாடம் புகட்டிய எனது தந்தை சிவனின் வாகனமான நந்தியம்பெருமனார், கரிமலையில் உள்ள தாய் பராசக்தி, கருப்பர் ஆகியோரை வணங்கி ஆசி பெறவேண்டும்.
சகல தோஷங்கள், சாபங்கள், பாவங்கள் நீக்கக் கூடிய நான் அவதரித்த தட்சிணா கங்கையான பம்பா நதிக்கு வந்தடைந்து, நீராடியவுடன் தேவர்கள், முனிவர்கள் ஆசி வழங்குவார்கள். பிறகு எனது தந்தை சிவன், பார்வதி, அண்ணன் விநாயகரை வணங்கி பெண் முனிவர் நீலி குடியிருக்கும் மலையில் ஏறி வர வேண்டும்’’ என்கிறார். சாமியே சரணம் ஐயப்பா
(நாளையும் தரிசிப்போம்…).
அதிகாலை
3.00 நடை திறப்பு
3.05 நிர்மால்ய தரிசனம்
3.15-11.30 நெய்யபிஷேகம்
3.25 கணபதி ஹோமம்
காலை
7.30 உஷ பூஜை
நண்பகல்
12.30 உச்சிகால பூஜை
1.00 நடை அடைப்பு
மாலை
3.00 நடை திறப்பு
6.30 தீபாராதனை
இரவு
7.00 புஷ்பாபிஷேகம்
10.30 இரவு பூஜை
10.50 அரிவராசனம்
11.00 நடை அடைப்பு
The post ஐயப்பன் அறிவோம் 32: 18 படிகள் appeared first on Dinakaran.