நாக்பூர்: மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் 20ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பாஜ தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால், முதல்வர் பதவி யாருக்கு என்பதில் பாஜ மற்றும் சிவசேனாவுக்கு இடையில் தான் மோதல் நடந்தது. கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டேயை ஒரு வழியாக சமாதானப்படுத்தி, கடந்த 5ம் தேதி பாஜ தலைமையில் மகாயுதி ஆட்சி அமைத்தது. முதல்வராக தேவேந்திர பட்நவிஸ், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித்பவார் பொறுப்பேற்றனர்.
இந்த நிலையில், நேற்று நாக்பூரில் உள்ள ராஜ்பவனில் நேற்று புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித்பவார் ஆகியோர் முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 33 பேர் கேபினட் அமைச்சர்களாவும், 6 பேர் இணையமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர். பாஜவில் 16 பேருக்கும், சிவசேனாவில் 9 பேருக்கும், தேசியவாத காங்கிரசில் 8 பேருக்கும் கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதே போல பாஜவில் 3 பேருக்கும், சிவசேனாவில் 2 பேருக்கும் தேசியவாத காங்கிரசில் ஒருவருக்கும் இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
The post மகாராஷ்டிராவில் 39 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு appeared first on Dinakaran.