×

தென் மாவட்டங்களில் கனமழை நெல்லை, தென்காசி, தூத்துக்குடிக்கு பேரிடர் மீட்பு படை விரைந்தது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தென் மாவட்டங்களில் கனமழை பெய்துவருவதையொட்டி நிவாரண நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்படி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 3 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பதிவானதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேற்று முன்தினம் (13ம் தேதி) முதல்வர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக, கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். அங்கு எடுக்கப்பட வேண்டிய தேவையான நடவடிக்கைகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்.

இதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், அணைகளின் நீர் இருப்பை கண்காணிக்க வேண்டும் என்றும், அணைகளில் இருந்து நீரினை திறந்துவிடும்போது பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் முன்னதாகவே தங்க வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கனமழையால் ஏற்பட்ட பயிர் சேத விவரங்கள் உள்பட அனைத்து சேத விவரங்களையும் துரிதமாக கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். ஏற்கனவே முதல்வர் உத்தரவின்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்தி வருகின்றனர்.

மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள, ஐஏஎஸ் நிலையிலான கண்காணிப்பு அலுவலர்களும் தொடர்புடைய மாவட்டங்களில் முகாமிட்டு மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மீட்பு பணியில் மாவட்ட நிர்வாகத்திற்கு உதவி புரியும் வகையில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தலா ஒரு குழு வீதம், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 3 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி, தேசிய பேரிடர் மீட்புப்படையின் ஒரு குழு திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அந்தமான் கடல் பகுதியில் 15ம் தேதி (இன்று) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என அறிவித்துள்ளது. அதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஏற்படவுள்ள மழை குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விவாதித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா, வேளாண்மை – உழவர் நலத்துறை செயலாளர் அபூர்வா, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் சத்யபிரத சாகு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post தென் மாவட்டங்களில் கனமழை நெல்லை, தென்காசி, தூத்துக்குடிக்கு பேரிடர் மீட்பு படை விரைந்தது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nellai, Tenkasi ,Thoothukudi ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu Disaster Relief Teams ,Tirunelveli ,Tenkasi ,Bay of Bengal… ,Nellai ,Dinakaran ,
× RELATED முக்காணி தாமிரபரணி ஆற்றில்...