×

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார். இன்று காலை 10.12 மணிக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. சென்னை ராமாபுரம் மின் மயானத்தில் நாளை பிற்பகல் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலும் பின்னர் சத்தியமூர்த்தி பவனிலும் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது; பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ப.சிதம்பரம் இரங்கல்
முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; E V K S இளங்கோவன் சில காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகத் துயரம் அடைந்தேன். இளங்கோவன் அவர்கள் கட்சித் தொண்டர்களின் அன்பும் ஆதரவும் பெற்றுப் பரபரப்பாகக் கட்சிப் பணியாற்றியவர். அவர் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். காங்கிரஸ் கட்சிக்குச் சோதனை வந்த காலங்களில் உறுதியாக நின்றவர். அவர் நல்ல பேச்சாளர் என்பது எல்லோரும் அறிந்ததே. அவர் மறைவு காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பின்னடைவு. அவருடைய மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் மனப்பூர்வமான அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தி அடைவதாக என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜோதிமணி எம்.பி. இரங்கல்
ஜோதிமணி எம்.பி.வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர், ஒன்றிய அமைச்சர், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் EVKS இளங்கோவன் அவர்களின் மறைவு, எதிர்கொள்ளவே முடியாத அதிர்ச்சியையும், துயரத்தையும் அளிக்கிறது. மலையே சாய்ந்தது போல் உணர்கிறேன். தான் ஒரு காங்கிரஸ்காரன் என்பதில் பெருமை கொண்டவர், அச்சமற்று பொதுவெளியில் தான் நம்புகிற ஒரு கருத்தை உறுதியோடு சொல்லக்கூடியவர்,சுயமரியாதையும்,தன்மானமும் மிக்கவர், இளைய தலைமுறை அரசியல் வாதிகளை சிறப்பாக செயல்படும்போது பாராட்டி ஊக்கப்படுத்தக்கூடியவர்.

எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு தந்தையைப் போன்றவர். அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கும்,தமிழ்நாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. ஏற்கனவே மகனை இழந்த துயரத்திலிருந்து மீளமுடியாத தாய்,கணவரையும் இழந்து நிற்கும்போது அவரை அணைத்துக்கொள்வது தவிர,ஆறுதல் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் பேரியக்க நண்பர்களுக்கும் , எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரின் மனதிலும் நீங்கள் உயிர்த்திருப்பீர்கள். போய்வாருங்கள் அப்பா என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் இரங்கல்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஒன்றிய இணை அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத பங்களிப்பு செய்த தலைவர்களின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் ஒருவர். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், செயல் தலைவர் என ஏற்றுக் கொண்ட பொறுப்புகள் அனைத்தையும் திறம்பட வகித்தவர்.

மன்மோகன்சிங் தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் நான் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த போது பல்வேறு துறைகளின் இணை அமைச்சராக பணியாற்றியவர் இளங்கோவன். என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர். ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த அவர், நலம் பெற்று வீடு திரும்புவார் என எதிர்பார்த்திருந்த வேளையில் அவரது மறைவுச் செய்தி மனதை வாட்டுகிறது. அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், அவரது குடும்பத்திற்கும் பேரிழப்பாகும். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் கட்சினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

திருமாவளவன் இரங்கல்
விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காங்கிரஸ் பேரியக்கத்தின் சட்டமன்ற உறுப்பினரும் மேனாள் இந்திய ஒன்றிய அமைச்சருமான அண்ணன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவு பெருந்துயரத்தை அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் என்மீது மிகுந்த பற்றுதலைக் கொண்டிருந்தவர். அவ்வப்போது தொடர்பு கொண்டு என்னை ஊக்கப்படுத்தியவர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல்
மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர். அவருடைய மறைவு தமிழக அரசியல் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் யாவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்: தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Erode East Block ,M. L. A. E. V. K. S. Ilangovan ,Chennai ,Congress ,Erode East ,L. A. Vuma E. V. K. S. Ilangovan ,V. ,K. S. ,Tamil Nadu Congress Party ,Ilangovan ,Chennai Ramapuram E Mayanath ,
× RELATED ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்