ஐதராபாத்: சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது ெசய்யப்பட்டார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு அல்லு அர்ஜுன் நடித்திருந்த புஷ்பா திரைப்படம் 2021ல் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. படத்தின் 2வது பாகம் உலகம் முழுவதும் கடந்த 5ம் தேதி 12 ஆயிரம் தியேட்டர்களில் வெளியானது. புஷ்பா – 2 படத்தின் சிறப்பு காட்சி ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் 4ம் தேதி இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. அப்போது, படத்தை ரசிகர்களுடன் காண நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா சந்தியா தியேட்டருக்கு வந்திருந்தனர்.
படத்தை விட இருவரையும் காண தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. கட்டுப்படுத்த முடியாத கூட்டம், கரகோஷம் என நிலைமை எல்லை மீறி போக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வேறு வழியின்றி தடியடி நடத்த ஆரம்பித்தனர். போலீசாரை கண்டு ஆட்டம் போட்ட ரசிகர்கள் தலைதெறித்து ஓட எல்லாம் தலைகீழானது. அப்போது குடும்பத்துடன் படம் பார்க்க வந்த 35 வயதான ரேவதி மற்றும் 9 வயதான அவரது மகன் தேஜா இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது அங்கும் இங்கும் ஓடிய ரசிகர்கள், இருவர் மீதும் ஏறி மிதித்ததில் படுகாயமடைந்தவர்கள், மூச்சுப் பேச்சின்றி சுயநினைவை இழந்தனர்.
பின்னர் அவர்களை மீட்டு முதலுதவி அளித்த போலீசார், ஆர்டிசி கிராஸ்ரோட்டில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தாய் ரேவதி ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறி அதிர்ச்சி கொடுத்தனர். இவ்விவகாரம் தொடர்பாக அல்லு அர்ஜூன், திரையரங்க உரிமையாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது. அதனால் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை, ரத்து செய்யக்கோரி தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் இன்று மதியம் நடிகர் அல்லு அர்ஜூனை சிக்கட்பள்ளி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தியேட்டர் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி விவகாரம்; நடிகர் அல்லு அர்ஜுன் கைது.! தெலங்கானா போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.