அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெரிய செங்கீரை பகுதியை சேர்ந்தவர் ராஜா(30). இன்ஜினியரான இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அபிராமி (29). இவர்களுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அபிராமிக்கு பெண் குழந்தை பிறந்து நரம்பியல் பிரச்னை தொடர்பாக குழந்தை இறந்துள்ளது. இந்நிலையில் அபிராமி 2வது முறையாக கர்ப்பமானதால் கணவர் ஊருக்கு வந்துள்ளார். அவர், இணையதளத்தில் படித்தும், யூடியூப் வீடியோ பார்த்தும் மனைவிக்கு மருத்துவம் பார்த்ததாக கூறப்படுகிறது. நிறைமாத கர்ப்பிணியான நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை அபிராமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அப்போது ராஜா, யூடியூப் பார்த்து மனைவி அபிராமிக்கு பிரசவம் பார்த்துள்ளார். உதவியாக அவரது தாய் இருந்துள்ளார். இதில் அபிராமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அடுத்த சில மணி நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தது. அபிராமிக்கு நஞ்சுகொடி சரிவர எடுக்காததால், அதிகளவு ரத்தபோக்கு ஏற்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் அவரை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்த குழந்தையை வீட்டிற்கு அருகே ராஜா குழிவெட்டி புதைத்து உள்ளார். தகவலறிந்து தாசில்தார் முன்னிலையில் ஆவுடையார்கோவில் போலீசார் குழந்தை சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இதுபற்றி வழக்கு பதிவு செய்து ராஜா, அவரது தாயாரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
The post யூடியூப் பார்த்து மனைவிக்கு கணவன் பிரசவம் :குழந்தை பலி appeared first on Dinakaran.