×

பாரம்பரிய சின்னம், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஒன்றிய அரசை வலியுறுத்தி மக்களவையில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் போர்க்கொடி

புதுடெல்லி: ‘பாரம்பரிய சின்னங்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என மக்களவையில் ஒன்றிய அரசை வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர். மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு வழங்கி உள்ளது. இந்த சுரங்கம், தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பெருக்க தலமான அறிவிக்கப்பட்ட அரிட்டாப்பட்டிக்கு அருகே அமைய இருக்கிறது. நாயக்கர்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பழங்கால கோயில்கள், வரலாற்று நினைவுச் சின்னங்கள், தொல்லியல் பொக்கிஷங்கள் உள்ளன.

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் இவை அனைத்தும் சேதமடைவதோடு, அப்பகுதியில் நீர் ஆதாரங்களும் அடியோடு பாதிக்கப்படும், அரியவகை உயிரினங்கள் அழியும் நிலை ஏற்படும் என சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 40 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும், இத்தகைய இன்றியமையாத மற்றும் முக்கிய கனிமங்களுக்கான உரிமங்களை மாநில அரசுகளின் அனுமதியின்றி ஒன்றிய அரசு ஏலம் விடக்கூடாது என தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 9ம் தேதி தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தனித்தீர்மானம் உடனடியாக ஒன்றிய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவையிலும் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில், டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்க திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.

அதன்படி, நேற்று பூஜ்ய நேரத்தில் திமுக எம்பி கனிமொழி, டங்ஸ்டன் விவகாரத்தை எழுப்பி எதிர்ப்பை பதிவு செய்தார். அவர் பேசுகையில், ‘‘டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி தந்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு, கலாச்சார, பாரம்பரிய சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி அளிக்கும் முன் மாநில அரசிடம் ஒன்றிய அரசு கலந்தாலோசிக்கவில்லை. பல்லுயிர் பெருக்கத்துக்கான முக்கிய இடம் என்பதால் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த திட்டம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இத்தகைய சுரங்கங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் விவசாய உற்பத்தியை பாதித்து விவசாயத்தை அழிப்பதால் பல நாடுகள் இதை நிறுத்தி உள்ளன. ஆகவே டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’’ என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு, ‘‘தமிழ்நாடு சட்டப்பேரவையின் தீர்மானத்தை ஏற்று டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும். தமிழ்நாட்டில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளித்தால் பெரும் சுற்றுச்சூழல் கேடு ஏற்படும்’’ என்றார். காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேசுகையில், ‘‘மதுரை மாவட்டம் அழகர்கோவில் மற்றும் அரிட்டாப்பட்டி இடையே ஏராளமான இடங்களில் கிடைக்கும் டங்ஸ்டன் கனிம வளத்தை வேதாந்தா ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அழகர்கோவில் போன்ற தமிழ்நாட்டின் புண்ணிய தலங்களை அழிப்பதில் பாஜவுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் என்று தெரியவில்லை. வேதாந்தாவா? கடவுளா? என்றால் பாஜ அரசு வேதாந்தாவுடன் செல்ல தயாராக உள்ளது. டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே டங்ஸ்டன் சுரங்க பணிகளை ஒன்றிய அரசு உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்’’ என்றார். இவ்வாறு டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு மக்களவையிலும் திமுக கூட்டணி எம்பிக்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.

* மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு கடந்த மாதம் 7ம் தேதி ஒன்றிய அரசு வழங்கி உள்ளது.
* டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒப்புதல் தரப்பட்டுள்ள நாயக்கர்பட்டி பகுதி அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும், பல்லுயிர் பெருக்க தலமாகவும் இருப்பதாக தமிழ்நாடு அரசு சுட்டிக் காட்டியும் அப்பகுதியில் சுரங்க நடவடிக்கை மேற்கொள்வதற்கான உரிமம் ஒன்றிய அரசால் தரப்பட்டுள்ளது.
* டங்ஸ்டன் சுரங்கத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 40 கிராமத்தை சேர்ந்த மக்கள் இத்திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post பாரம்பரிய சின்னம், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஒன்றிய அரசை வலியுறுத்தி மக்களவையில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் போர்க்கொடி appeared first on Dinakaran.

Tags : DMK alliance ,Lok Sabha ,Union government ,New Delhi ,DMK ,Tungsten ,Madurai district ,Melur circle ,Nayakarpatti ,Dinakaran ,
× RELATED குழந்தைகள் உணவில் கூடுதல் சர்க்கரை...